வியக்க வைக்கும் விக்டோரியா அரங்கம்... மக்கள் பார்வையிடலாம்... முன்பதிவு செய்யணுமா?
சென்னை விக்டோரியா அரங்கத்தை பார்வையிட முன்பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கும் ரிப்பன் கட்டடத்துக்கும் இடையே அமைந்துள்ள விக்டோரியா பொது அரங்கம், நகரின் மிக முக்கியமான பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று. இந்தோ-சரசெனிக் பாணியில் கட்டப்பட்ட இந்த அழகிய கட்டடம், 1887-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவின் பொன் விழாவை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டது. பிரபல கட்டடக் கலைஞர் ராபர்ட் ஃபெலோஸ் சிஷோல்ம் வடிவமைத்து, தாடிகொண்ட நம்பெருமாள் செட்டி கட்டிய இந்த அரங்கம், சென்னையின் சமூக, அரசியல் மற்றும் கலாச்சார வாழ்வின் மையமாக விளங்கியது.
காந்தி, ரவீந்திரநாத் தாகூர் போன்ற தலைவர்கள் இங்கு உரையாற்றியுள்ளனர். சென்னையில் முதல் திரைப்படக் காட்சி இங்குதான் நடந்தது. நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்த இந்த அரங்கம், 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சென்னையின் கலாச்சார மையமாகத் திகழ்ந்தது. செங்கல் சுவர்கள், சுண்ணாம்பு பூச்சு, இத்தாலியன் கோபுரம் மற்றும் திரவாங்கூர் பாணி கூரை ஆகியவை இதன் தனித்துவமான அமைப்பை வெளிப்படுத்துகின்றன.பல ஆண்டுகளாக பராமரிப்பின்மை காரணமாக இந்த கட்டடம் சிதிலமடைந்தது.
பலமுறை சிறு அளவிலான பழுதுபார்க்கும் பணிகள் நடந்த போதிலும், அவை போதுமானதாக இல்லை. இந்நிலையில், 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ் முழுமையான புனரமைப்புப் பணிகள் தொடங்கின. சென்னை மாநகராட்சி மேற்கொண்ட இந்தத் திட்டம் சுமார் 32.62 கோடி ரூபாய் செலவில் நிறைவுற்றது. பணிகளில் கட்டடத்தின் அசைவுத் தாங்குதன்மை, கூரை மறுசீரமைப்பு, உட்புற மற்றும் வெளிப்புற பாதுகாப்பு, மர வேலைப்பாடுகள், மின்சாரம், தீ பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் முகப்பு விளக்குகள் ஆகியவை அடங்கும்.
இதையும் படிங்க: போலி வாக்குறுதி முதல்வருக்கு புத்தாண்டு வாழ்த்து... அதிமுக கடும் விமர்சனம்...!
முக்கியமாக, கட்டடத்தின் அசல் கட்டமைப்பு மற்றும் அழகு எவ்வித மாற்றமும் இன்றி பாதுகாக்கப்பட்டது. புனரமைக்கப்பட்ட விக்டோரியா அரங்கத்தை மக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் அடையாளமாக விளங்கிய விக்டோரியா அரங்கத்தை பார்வையிட முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://gccservices.in/victoriapublichall என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எங்களுக்கு என்ன புத்தாண்டு? ஓயமாட்டோம்... 8வது நாளாக போராட்டத்தை தொடரும் ஆசிரியர்கள்...!