×
 

அரையாண்டு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை எதிரொலி!! ராக்கெட் வேகத்தில் ஆம்னி பஸ் கட்டணங்கள் உயர்வு!

கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயா்ந்தது.

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளுக்கான அரையாண்டு விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் புதன்கிழமை (டிசம்பர் 24, 2025) இரவு பல மடங்கு உயர்த்தப்பட்டது. 

ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பியதால் ரயில் மற்றும் அரசு விரைவு பேருந்துகளில் இடங்கள் முன்பதிவு முடிந்துவிட்டன. இந்த நிலையில் தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கட்டணத்தை அதிகப்படுத்தின.

வழக்கமான நாட்களில் சென்னையிலிருந்து ஈரோடு செல்ல ஆம்னி பேருந்தில் ரூ.750 முதல் ரூ.900 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அது ரூ.1,600 முதல் ரூ.2,000 வரை உயர்த்தப்பட்டது. இதேபோல் சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்துகளில் கட்டணம் ரூ.2,000 முதல் ரூ.4,500 வரையும், கோயம்புத்தூருக்கு ரூ.2,000 முதல் ரூ.5,000 வரையும், நாகர்கோவிலுக்கு ரூ.2,500 முதல் ரூ.5,000 வரையும் உயர்த்தப்பட்டது.

இதையும் படிங்க: பிறந்தார் இயேசு கிறிஸ்து!! தேவாலயங்களில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை!

மதுரை, சேலம், திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளிலும் வழக்கத்தைவிட ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. புதன்கிழமை இரவு நேரம் ஆக ஆக கட்டணம் தொடர்ந்து உயர்ந்ததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பலர் கட்டண உயர்வால் தவித்தனர். சிலர் வேறு வழியின்றி அதிக கட்டணம் செலுத்தி பயணித்தனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக குடும்பத்தினருடன் சொந்த ஊர் செல்ல விரும்பிய பயணிகள் இந்த கட்டண உயர்வால் அதிர்ச்சி அடைந்தனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இரவு நேரத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஆம்னி பேருந்து நிறுவனங்கள் தேவைக்கேற்ப கட்டணத்தை நிர்ணயிப்பதால் அரசு தரப்பில் எந்த கட்டுப்பாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பயணிகள் சங்கங்கள் இந்த கட்டண உயர்வை கண்டித்துள்ளன. விடுமுறை நாட்களில் கட்டணத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பல குடும்பங்கள் விடுமுறையை ரத்து செய்தோ அல்லது வேறு வழிகளை தேடியோ செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையும் படிங்க: ஹாப்பி கிறிஸ்துமஸ்!! கொண்டாட்டத்துக்கு தயாராகும் சென்னை! 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share