இந்தா ஆரம்பிச்சிட்டாங்க இல்ல.. ஜி.டி. நாயுடு மேம்பாலத்தால் அடுத்த சர்ச்சை... திமுக-அதிமுக உறுப்பினர்கள் இடையே மோதல்...!
கோவையில் புதிதாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள ஜி.டி.நாயுடு மேம்பால விவகாரத்தில் அடுத்த சர்ச்சையை அதிமுக, திமுகவினர் ஆரம்பித்துள்ளனர்.
கோவை அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உப்புலிபாளையத்தில் இருந்து கோல்டுவின்ஸ் வரை உள்ள சுமார் 10.1 கிலோ மீட்டர் தொலைவிற்கான மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜி.டி.நாயுடு மேம்பாலம் என பெயர் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 9ம் தேதி மக்களுக்காக அர்ப்பணித்தார்.
அதற்கு முதல் நாள் தான் தமிழ்நாடு அரசு சார்பில் சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. மறுநாளே ஜி.டி.நாயுடு என்ற பெயரை மேம்பாலத்திற்கு அரசே சூட்டியது கடும் விமர்சனங்களைக் கிளப்பியது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள், அவினாசி ரோடு மேம்பால திட்டம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது என்று கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறாக நிகழ்ச்சி நடத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், கே.ஆர்.ஜெயராம் உள்ளிட்ட அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
தற்போது ஜி.டி.நாயுடு புதிய மேம்பாலத்தை கட்டியது யார்? என்று கொவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் போகப் போறீங்களா? - கோவை மக்களை எச்சரித்த காவல்துறை...!
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை கொண்டு வந்தது அதிமுக தான் என முழக்கமிட்டனர். ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள், அதிமுக ஆட்சி காலத்தில் பாலத்திற்கான கட்டுமான பணிகள் வெறும் 10 சதவீதம் மட்டுமே நிறைவடைந்திருந்ததாகவும், மீதமிருந்த 90 சதவீத பணிகளை திமுக அரசே சிறப்பாக முடித்துவைத்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதிருப்பதாகவும் கூறினர்.
இதனால் மாமன்ற கூட்டத்தில் திமுக - அதிமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. இருதரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான முழக்கங்களை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியாக அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததால பரபரப்பு ஏற்பட்டது. ன்ம்.,
இதையும் படிங்க: மேம்பாலத்தின் பெயரில் குழப்பம்: ‘அண்ணா’வா? ஜி.டி.நாயுடுவா..? முதலமைச்சர் நிகழ்ச்சி நிரலில் கோளாறு..!!