அண்ணா பல்கலை.,: தனியார் கல்லூரிகளில் ஆக.18 முதல் வகுப்புகள் தொடக்கம்..!
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் கல்லூரிகளில் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உயர் கல்வியில் முக்கிய பங்கு வகிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் 2025-26 கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு முக்கியமான தகவலாக அமைகிறது.
மேலும் அண்ணா பல்கலை.யின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் நான்கு கல்லூரிகள் மட்டும் ஆகஸ்ட் 11-ல் வகுப்புகள் தொடங்கும் என்றும் கல்லூரிகள் திறக்கும் தேதியை தன்னாட்சி கல்லூரிகளே முடிவு செய்ய செய்து கொள்ளலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாட்டில் சுமார் 250 பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்கிறது, இதில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ. உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி ஆகஸ்ட் 12 முதல் 15 வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வழக்கமான வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் தொடங்கும். முதல் செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 2025 இல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பயங்கர நிலநடுக்கம்.. இடிந்து விழுந்த தாமிர சுரங்கம்.. தொழிலாளர்களின் கதி என்ன..?
இந்த ஆண்டு, கலந்தாய்வு முடிந்து மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ள நிலையில், கல்லூரிகள் தங்கள் உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் விவரங்களை ஆன்லைன் மூலம் புதுப்பிக்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 141 தனியார் கல்லூரிகளில் குறைபாடுகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டு, அவற்றை சரிசெய்ய 45 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இது, கல்வி தரத்தை உயர்த்துவதற்கான பல்கலைக்கழகத்தின் முயற்சியாக பார்க்கப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.annauniv.edu இல் மேலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: 'ஆப்ரேஷன் அகல்' காஷ்மீரில் இந்திய ராணுவ தீவிர வேட்டை.. பயங்கரவாதியை துளைத்தது தோட்டா!!