சைதாப்பேட்டை விடுதிகளில் முதல்வர் விஜய் ஆய்வு: மாணவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற உத்தரவு!
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் எம்.சி ராஜா கல்லூரி மாணவர்கள் விடுதி மற்றும் சமூக நீதி விடுதி வளாகத்தில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்குச் சொந்தமான எம்.சி. ராஜா கல்லூரி மாணவர்கள் விடுதி மற்றும் சமூக நீதி விடுதி வளாகத்தில், தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் பயின்று வரும் இந்த விடுதிகளில், உணவுப்படி (Food Allowance) போதிய அளவு வழங்கப்படவில்லை என்றும், இதர அடிப்படை வசதிகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
குறிப்பாக, தினசரி உணவுப்படி 50 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், விடுதியில் உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கான ஊக்கத்தொகை மற்றும் உதவித்தொகை வழங்கப்படுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் மாணவர்கள் நீண்ட காலமாக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், விடுதி சூழலை நேரில் ஆய்வு செய்ய முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீரென வருகை தந்தது மாணவர்கள் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
விடுதி வளாகத்திற்குள் சென்ற முதலமைச்சர், மாணவர்களின் அறைகள், உணவுக் கூடம் மற்றும் இதர வசதிகளை நேரடியாகப் பார்வையிட்டார். பின்னர், விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். விடுதியில் நிலவும் பிரச்சினைகள், உணவுத் தரம் மற்றும் இதர தேவைகள் குறித்து மாணவர்கள் முதலமைச்சரிடம் விளக்கினர். மாணவர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டுக்கொண்ட முதலமைச்சர், குறைகளை விரைந்து சரிசெய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து, எம்.சி. ராஜா கல்லூரி விடுதிக்கு எதிரே உள்ள சமூக நீதி விடுதியிலும் ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த மாணவர்களிடமும் முதலமைச்சர் கலந்துரையாடினார்.
இதையும் படிங்க: நானே பதிவு செஞ்சுட்டேன், நீங்க ரெடியா? மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து முதல்வர் விஜய் ட்வீட்!
ஆய்வின் முடிவில், அமைச்சர்கள் வன்னியரசு மற்றும் சம்பத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், முதலமைச்சர் ஆய்வுக்குச் செல்வது தங்களுக்கு பத்து நிமிடங்களுக்கு முன்பாகவே தெரியப்படுத்தப்பட்டதாகவும், ஊழலற்ற சுத்தமான அரசாங்கத்தை வழங்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தனர். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் நேரில் வந்து மாணவர்களின் குறைகளைக் கேட்டறிந்தது இதுவே முதல்முறை என்று அமைச்சர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
அடுத்தமுறை ஆய்வு செய்யும் போது, இன்று மாணவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்திருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் 44 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த 10 மாடி புதிய கட்டிடத்தின் பராமரிப்பு மற்றும் மாணவர் நலன் சார்ந்து அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அமைச்சர்கள் உறுதியளித்தனர்.
இதையும் படிங்க: செம்மொழி பூங்கா திட்டத்தில் ரூ.40 கோடி ஊழல்! திமுக ஆட்சியை வெளுத்து வாங்கிய வானதி சீனிவாசன்!