வரும் 26ம் தேதி.. முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க விழா.. பஞ்சாப் முதல்வருக்கு அழைப்பு..!!
சென்னையில் வரும் ஆகஸ்ட் 26ம் தேதி நடைபெறும் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க விழாவில் பங்கேற்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும் விழாவை வரும் ஆகஸ்ட் 26ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார். இந்த விழா, சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் மூலம், 2,430 அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 3.05 லட்சம் மாணவர்கள் தினசரி பயனடைய உள்ளனர்.
இந்தியாவுக்கு முன்மாதிரியாகவும், சர்வதேச தரத்துடனும் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் விரிவாக்க விழாவை சிறப்பிக்க, நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் பங்கேற்கிறார். இதற்காக திமுக எம்.பி. வில்சன் நேரில் சென்று பஞ்சாப் முதல்வருக்கு அழைப்பிதழை வழங்கினார்.
இதையும் படிங்க: சென்னை டூ டெல்லி.. நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் வெற்றிகரமாக புறப்பட்டது..!!
தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் பதிவில், “திராவிட மாடல் அரசின் இந்த முன்னோடி திட்டம் மாணவர்களுக்கு சத்தான உணவுடன் கல்வியை உறுதி செய்கிறது” என பெருமிதம் தெரிவித்தார். இவ்விழாவில் பகவந்த் மானின் பங்கேற்பு, தமிழ்நாட்டின் இந்த மகத்தான முயற்சிக்கு மேலும் பெருமை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிலேயே முதன்முறையாக கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் தொடங்கப்பட்ட இத்திட்டம், மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 2023 ஆகஸ்ட் 25-ல் திருக்குவளையில் 30,992 பள்ளிகளில் 18.50 லட்சம் மாணவர்களுக்கு விரிவாக்கப்பட்டது. 2024 ஜூலை 15-ல் திருவள்ளூர் மாவட்டத்தில் 3,995 பள்ளிகளில் 2.24 லட்சம் மாணவர்களுக்கு இத்திட்டம் விரிவு செய்யப்பட்டது.
இத்திட்டம் மாணவர்களின் பள்ளி வருகையை அதிகரித்ததுடன், கற்றல் திறனை மேம்படுத்தியுள்ளது. ஆய்வறிக்கைகளின்படி, 90% மாணவர்களின் நினைவாற்றல் திறன் மேம்பட்டுள்ளது, ஊட்டச்சத்து குறைபாடு களையப்பட்டு, ஆரோக்கியமும் மேம்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பின்பற்றி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களும், கனடா அரசும் இத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளன.
நகர்ப்புறப் பகுதிகளில் இத்திட்டத்தை விரிவாக்குவதற்கு கடந்த மார்ச் 14ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்மூலம், மாணவர்களின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் மேலும் ஒரு மைல்கல் எட்டப்படுகிறது. இத்திட்டம், பசியின்றி கல்வி கற்க உதவுவதுடன், மாணவர்களின் தன்னம்பிக்கையையும், பள்ளி ஈடுபாட்டையும் அதிகரிக்கிறது.
இதையும் படிங்க: நாளை 11 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்.. எந்தந்த பகுதிகள் தெரியுமா..??