சுதந்திர தின ஸ்பெஷல்; 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ 22 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான ஓய்வூதியம் ரூ 12 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் சுதந்திர தின விழா உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
79 ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். அது போல் தமிழகத்தில் சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார்.
தொடர்ந்து தமிழக மக்களுக்கு சுதந்திர உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முதலில் விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு ரூ 20 ஆயிரம் ஓய்வூதியமாகவும் அவரது குடும்பத்தினருக்கு ரூ 10 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கி வருகிறோம். தற்போது தியாகிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ 22 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. கட்டபொம்மன், வஉசி வழித்தோன்றல்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ 11 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். 2ஆம் உலகப் போரில் பங்கேற்ற தமிழக வீரர்களுக்கான நிதியுதவி ரூ 15 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. 2ஆம் உலகப் போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ 8 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.
தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்காக விரிவுபடுத்தப்படும். சென்னை மாதவரத்தில் 22 கோடி மதிப்பீட்டில் முன்னாள் படை வீரர்களுக்கான தங்கும் விடுதி கட்டப்படும். ஓட்டுனர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் 8 பயிற்சி மையங்கள் மற்றும் மாவட்டத்திற்கு ஒரு ஓட்டுனர் பயிற்சி மையம் ஆகியவை தொடங்கப்படும். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் கல்லூரிகள் படிக்கும்போது திறனை மேம்படுத்தி வேலை வாய்ப்பை பெற, நவீன தொழில்நுட்பங்களில் 10,000 மாணவர்களுக்கு 15 கோடி ரூபாய் செலவில் இணைய வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் ஆகிய 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதையும் படிங்க: குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டியே தீரணும்... சுதந்திர தினத்தில் இபிஎஸ் சூளுரை!
இதையும் படிங்க: #BREAKING: மனசு நிறைவா இருக்கு... வளர்ச்சினா என்ன தெரியுமா? நெகிழ்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!