"CM சார் நீங்க தான் கெத்து TVK எல்லாம் வெத்து"... மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வழியனுப்பிய சிறுமி... வைரல் வீடியோ...!
கொடைக்கானல் நட்சத்திர விடுதியில் இருந்து சென்னை புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு, கடந்த மார்ச் 15 ஆம் தேதி வெளியானது. அப்போது முதல் தமிழக தேர்தல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடுகளை முடித்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக இறங்கினர். தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.
கடந்த 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், கடந்த 24ம் தேதி கொடைக்கானலில் ஓய்வெடுப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், தனது மனைவி துர்காவுடன் சென்றார். அவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பர்புரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி 4 நாட்களாக ஓய்வெடுத்தார். அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளும் முதல்வரை சந்திக்க வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
கொடைக்கானலில் தங்கியிருந்த போது தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் செல்ஃபி எடுத்தும், கை குலுக்கியும் உற்சாகமடைந்தனர். முதல் இரண்டு நாட்களாக காலை வேளையில் ஏரி சாலை மற்றும் மனோரஞ்சிதம் நீர்த்தக்கத்தை சுற்றி நடைபயிற்சி மேற்கொண்டார். மூன்றாவது நாளான நேற்று கொடைக்கானல் ஏரி சாலையில் சுமார் 2 கிலோ மீட்டருக்கு நடை பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் திடீரென்று சைக்கிளில் சவாரி செய்து ஏரிச்சாலை முழுக்க சுற்றி வந்தார்.
இதையும் படிங்க: சைக்கிளில் ஜாலியாக வலம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்... 3வது நாளாக கொடைக்கானலில் நடைபயிற்சி..!
மேலும் திடீரென்று சைக்கிள் ஓட்டிச் சென்ற முதல்வரை பொதுமக்கள் ஆரவாரமாக உற்சாகமாக வரவேற்ற நிலையில் ஏரி சாலையை சுற்றி நடை பயிற்சி சென்ற முதல்வருடன் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ஃபி எடுத்தனர். முதல்வரை பின்தொடர்ந்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி மேற்கொண்டனர்.
இன்று தனது ஓய்வை முடித்துக்கொண்டு சென்னை திரும்புகிறார். கொடைக்கானலில் வழி நெடுகிலும் இருபுறமும் காத்திருந்து மக்கள் முதலமைச்சர் ஸ்டாலினை வழியனுப்பினர். அப்போது காரிலிருந்து இறங்கி வந்த ஸ்டாலின் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்ததோடு, மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுடன் செல்பி எடுத்த அவருக்கு பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். இந்நிலையில் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுமி திடீரென்று பூங்கத்தை கொடுத்து “CM சார் நீங்க தான் கெத்து TVK எல்லாம் வெத்து" என்று கூறியவுடன் முதலமைச்சர் சிறுமியிடம் சின்ன புன்னகையுடன் அதனை பெற்றுக் கொண்டார். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: பணியில் இருக்க வேண்டிய நேரத்தில் ஓய்விற்கு செல்கிறார்கள்..!! முதல்வர் ஸ்டாலினை வம்பிழுத்த தமிழிசை..!!