×
 

அண்ணாவின் 57-வது நினைவு நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதி பேரணி!

வாலாஜா சாலையில் திரண்ட ஆயிரக்கணக்கானத் தொண்டர்கள் அண்ணா நினைவிடம் நோக்கி அணிவகுக்கும் உடன்பிறப்புகள்; வழிநெடுகிலும் ‘தென்னாட்டு காந்தி’க்கு வீரவணக்கம்.

திராவிட இயக்கத்தின் பேராசான் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57-ஆவது நினைவு நாளையொட்டி, தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் பிரம்மாண்டமான அமைதிப் பேரணி நடைபெற்றது. கருப்புச் சட்டை அணிந்த ஆயிரக்கணக்கானக் கழகத் தொண்டர்கள் இந்தப் பேரணியி+ல் பங்கேற்று அண்ணாவுக்குத் தங்களது மரியாதையைச் செலுத்தினர்.

பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளையும், அவர் தமிழகத்திற்கு ஆற்றியத் தொண்டுகளையும் போற்றும் வகையில் இந்தப் பேரணி உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றது. இன்று காலை சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் பேரணி தொடங்கியது.

வாலாஜா சாலை அண்ணா சிலையிலிருந்து புறப்பட்ட இந்தப் பேரணி, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் வரை சென்றது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்தப் பேரணியைத் தலைமை தாங்கி நடத்திச் சென்றார். பேரணியின் ஒரு பகுதியாக அண்ணாவின் உருவப்படம் மற்றும் "உயர்ந்த எண்ணமும் உழைப்பும் சக்தியுமே உன்னை மகிழ்விக்கும்" என்ற அண்ணாவின் பொன்மொழிகள் தாங்கிய அலங்கார ஊர்தி அணிவகுத்துச் சென்றது.

இதையும் படிங்க: அண்ணாதான் ஆள்கிறார்! – நினைவு நாளில்  முதல்வர் ஸ்டாலினின் வீரவணக்கம்!

பேரணி மெரினா கடற்கரையை அடைந்ததும், முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்துத் தனது நெஞ்சார்ந்த வீரவணக்கத்தைச் செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பல்லாயிரக்கணக்கான உடன்பிறப்புகள் கலந்துகொண்டு அண்ணா வாழ்க என முழக்கமிட்டனர். முன்னதாக, அண்ணா தமிழர்களின் மனசாட்சி என்றும், அவர் காட்டிய வழியில் பாஜக-வின் ஆதிக்கத்திற்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்றும் முதல்வர் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திமுகவின் வாய்ச் சவடாலுக்கு தான் பேரறிஞர் அண்ணா தேவை... பூங்கா பெயர் மாற்றத்திற்கு இபிஎஸ் கண்டனம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share