துணை மருத்துவ படிப்புகளுக்கும் நீட், "இந்த அநீதியை அனுமதிக்க முடியாது” - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!
பிசியோதெரபி மற்றும் ஆக்குபேஷனல் தெரபி உள்ளிட்ட 13 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளதற்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பிசியோதெரபி மற்றும் ஆக்குபேஷனல் தெரபி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கு (Allied and Healthcare Courses) நீட் (NEET) தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளதற்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நீட் தேர்வை மேலும் விரிவுபடுத்துவது மாணவர்களின் நலனைப் பாதிக்கும்; எனவே இந்த முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தேசிய துணை மருத்துவ ஆணையம் (NCAHP) வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, 2026-27 கல்வியாண்டு முதல் 13 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய முதல்வர், ஒரு தேர்வில் தேர்ச்சி பெறுவதோ அல்லது அதிக மதிப்பெண் பெறுவதோதான் தகுதியாக இருக்க முடியும், ஆனால் நீட் தேர்வில் வெறும் பங்கேற்பு மட்டும் போதும் என்பதைத் தகுதியாக நிர்ணயிப்பது எந்த வகையிலும் நியாயமற்றது மற்றும் தர்க்கரீதியற்றது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீட் தேர்வைத் துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட்டிப்பது, மாணவர்களைக் கட்டாயமாகப் பயிற்சி மையங்களுக்கு அனுப்பும் நிலையை உருவாக்கும் என முதல்வர் எச்சரித்துள்ளார். இது ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதாரத்தைச் சிதைத்து, பயிற்சி மையங்களுக்கு மட்டுமே லாபத்தைத் தேடித்தரும். கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை முடக்கும் இந்தச் செயல், மாநில அரசுகளின் கல்வி உரிமையில் தலையிடும் செயலாகும்" என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பயந்து போய் அலறுகிறார் பொம்மை முதல்வர்! ஸ்டாலினுக்கு இபிஎஸ் கடும் பதிலடி!
மத்திய அரசின் இந்தத் திடீர் மாற்றத்தால், பி.எஸ்.சி நர்சிங் மற்றும் பிசியோதெரபி போன்ற படிப்புகளைக் குறிவைத்துத் தயாராகி வந்த லட்சக்கணக்கான மாணவர்கள் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர். சுயநிதித் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பு (FSFTI) போன்ற அமைப்புகளும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய சுகாதார அமைச்சகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளன. ஏற்கனவே மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில், இத்தகைய கடுமையான விதிகள் மாணவர் சேர்க்கையை மேலும் குறைக்கும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: “இரட்டை எஞ்சின் அல்ல... அது டப்பா எஞ்சின்!” மதுராந்தகம் மேடைக்கு சுடச்சுட பதிலடி கொடுத்த முதலமைச்சர்!