பயந்து போய் அலறுகிறார் பொம்மை முதல்வர்! ஸ்டாலினுக்கு இபிஎஸ் கடும் பதிலடி!
மதுராந்தகம் கூட்டணியின் எழுச்சியால் ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், 39 எம்பிக்களை வைத்தும் தமிழகத்திற்கு எதுவும் செய்யாத திமுக ஒரு 'Fraud Model' ஆட்சி என்றும் இபிஎஸ் சாடியுள்ளார்.
மதுராந்தகத்தில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்டப் பொதுக்கூட்டம், தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை 'பொம்மை முதல்வர்' எனச் சாடியதோடு, திமுக அரசை 'ஓடாத ஓட்டை எஞ்சின்' என்று மிகக் கடுமையாக விமர்சித்தார்.
பொதுக்கூட்டத்திற்குப் பிறகு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, எங்கள் கூட்டணியின் எழுச்சியை நேரலையில் பார்த்து முதல்வர் ஸ்டாலின் அலறிப் போய்விட்டார்; அதன் விளைவே எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்ட புலம்பல்கள் எனச் சாடியுள்ளார். அடி மேல் அடி வைத்தால் அம்மி கூட நகரும் என்பார்கள்; ஆனால் நான்கரை ஆண்டுகளாக ஒரு அடி கூட நகராத, ஒரு ஓடாத ஓட்டை எஞ்சின் ஆட்சியை நடத்திவிட்டு, தமிழக வளர்ச்சியின் கூட்டணியைப் பற்றிப் பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: எங்கள் கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும்! 210 இடங்களில் வெல்வோம் என இபிஎஸ் சபதம்!
மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்த திமுகவின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த இபிஎஸ், மதுரை மற்றும் கோவை மெட்ரோ எங்கே என்று வாய்கிழியக் கேட்கும் முதல்வர், அதற்கான முறையான ஆவணங்களை மத்திய அரசிடம் சமர்ப்பித்தாரா? ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வராக இருக்கும் இவருக்கு, அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளக் கூடத் துப்பில்லை. வெறும் காற்றில் கம்பு சுற்றும் வேலையைத்தான் திமுக செய்கிறது என விளாசினார். மேலும், 39 எம்பிக்களைக் கொடுத்த தமிழக மக்களுக்கு எதையுமே செய்யாமல் ஏமாற்றி வரும் திமுகவின் ஆட்சி ஒரு 'Fraud Model' ஆட்சி என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.
இந்த மேடையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "திமுக ஆட்சி ஒரு பூஜ்ஜியம் ஆட்சி" எனக் குறிப்பிட்டதையும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "அம்மாவின் தொண்டர்கள் ஒன்றாக இணைந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும்" எனப் பேசியதையும் இபிஎஸ் சுட்டிக்காட்டினார். நயினார் நாகேந்திரன், ஜி.கே.வாசன், பாரிவேந்தர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பங்களிப்பையும் அவர் பாராட்டியுள்ளார். குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி, பாதுகாப்பற்ற விடியா ஆட்சியை விரட்டியடிப்பதே மக்களின் எண்ணம்; அதை ஈடேற்றவே அதிமுக தலைமையில் இந்த வெற்றிக் கூட்டணி அமைந்துள்ளது. இது வெறும் தொடக்கம்தான், இன்னும் பல அதிரடிகள் வரவிருக்கிறது" என எடப்பாடி பழனிசாமி தனது உரையை 'நாளை நமதே' என்ற முழக்கத்துடன் நிறைவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: குடும்ப பிரச்சினை முடிவுக்கு வந்தது; இனி இருவரும் இணைந்தே பயணிப்போம்! டிடிவி தினகரன் நெகிழ்ச்சி!