"சமத்துவத்திற்கு ஒரு புதிய விடியல்!" - UGC புதிய விதிகளை வரவேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி
ராகிங் மற்றும் சாதிப் பாகுபாட்டிற்கு முற்றுப்புள்ளி! - உயர்கல்வி நிறுவனங்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள புதிய விதிகள்
உயர்கல்வி நிறுவனங்களில் ராகிங் மற்றும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளைத் தடுக்க பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கொண்டு வந்துள்ள 'சமத்துவ ஊக்குவிப்பு விதிகள் 2026' -ஐ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்கல்வி நிறுவனங்களில் நிலவி வரும் பாகுபாடுகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பற்றச் சூழலை மாற்ற இது ஒரு முக்கிய மைல்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆழமாக வேரூன்றிய பாகுபாடுகள் மற்றும் நிறுவன அலட்சியத்தால் வடுப்பட்டுள்ள உயர்கல்வி முறையைச் சீர்திருத்த இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில் உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி (SC), எஸ்டி (ST) மற்றும் ஓபிசி (OBC) மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக ரோஹித் வெமுலா போன்றவர்களின் தியாகங்களுக்குப் பிறகு இத்தகைய விதிகள் 'தவிர்க்க முடியாதத் தேவை' என்று அவர் கூறியுள்ளார். முதன்முறையாக ஓபிசி (OBC) மாணவர்களும் இந்தப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருப்பதை அவர் பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: “முத்தரையர் மறுவாழ்வு திட்டம் வேண்டும்!” - முதலமைச்சரிடம் தமிழர் தேசம் கட்சி தலைவர் கோரிக்கை
புதிய விதிகளின்படி, உயர்கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டியக் கட்டாய நடவடிக்கைகள்:
ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு சமவாய்ப்பு மையம் அமைக்கப்பட வேண்டும். இது பாகுபாடுகள் குறித்தப் புகார்களைக் கையாளுவதோடு, மாணவர்களுக்கு வழிகாட்டுதலும் வழங்கும். நிறுவனத்தின் தலைமை அதிகாரியின் தலைமையில் இக்குழு செயல்படும். இதில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முறையானப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
15 வேலை நாட்களுக்குள் விரிவான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். 24/7 உதவி எண், மாணவர்கள் எந்த நேரத்திலும் புகார் அளிக்க ஏதுவாக ஆன்லைன் தளம் மற்றும் 24 மணி நேர உதவி எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளைப் பின்பற்றாத கல்வி நிறுவனங்கள் மீது UGC கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும். குறிப்பாக, பல்கலைக்கழக அங்கீகாரம் ரத்து செய்யப்படலாம், நிதி உதவி நிறுத்தப்படலாம். பட்டங்கள் வழங்கும் அதிகாரம் இடைநீக்கம் செய்யப்படலாம்.
இதையும் படிங்க: "மகாராஷ்டிராவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு!" - அஜித் பவார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!