×
 

"2 நாட்கள் அனைவருக்கும் இலவசம்"... முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் அதிரடி அறிவிப்பு...!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி வன உயிரியல் பூங்கா மற்றும் சேலம் குறும்பட்டி வன உயிரியல் பூங்கா ஆகிய மூன்று பூங்காக்களிலும் பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்பட உள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி.சி. ஜோசப் விஜயின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் வனத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி வன உயிரியல் பூங்கா மற்றும் சேலம் குறும்பட்டி வன உயிரியல் பூங்கா ஆகிய மூன்று பூங்காக்களிலும் பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 21.06.2026 ஞாயிற்றுக்கிழமை மற்றும் முதலமைச்சரின் பிறந்தநாளான 22.06.2026 திங்கட்கிழமை ஆகிய இரண்டு நாட்களிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வழக்கம்போல் ஆன்லைன் மூலம் நுழைவுச்சீட்டு பெற்றுக்கொண்டு எந்தவித நுழைவுக் கட்டணமும் இன்றி உயிரியல் பூங்காக்களை பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நாட்களுக்கான நுழைவுக் கட்டணச் செலவினம் முழுவதையும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பிலும், வனத்துறை அமைச்சரான தாம் மற்றும் தனது சகோதரர் ஆகியோர் இணைந்து நடத்தி வரும் "வாழ்மணி நாயக்கர் குடும்ப அறக்கட்டளை" சார்பிலும் அரசுக்கு செலுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

மேலும், வழக்கமாக இந்த பூங்காக்களுக்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டால், இரண்டு நாட்களுக்கான மொத்த செலவு சுமார் 70 லட்சம் ரூபாயைத் தாண்டக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகும். இங்கு 170-க்கும் மேற்பட்ட உயிரினங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் வேலூர் அமிர்தி வன உயிரியல் பூங்கா மற்றும் சேலம் குறும்பட்டி வன உயிரியல் பூங்காவும் பொதுமக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்ற சுற்றுலாத் தலங்களாக உள்ளன.

முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் இந்த உயிரியல் பூங்காக்களை பார்வையிடும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், முதலமைச்சரின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டமும் முன்னெடுக்கப்பட உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ளதாகவும், பல்வேறு மாவட்டங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர், இந்த சிறப்பு வாய்ப்பைப் பயன்படுத்தி உயிரியல் பூங்காக்களை பார்வையிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "வெள்ளை அறிக்கை தவெகவின் எஸ்கேப்பிசம்"..! வெளுத்து வாங்கிய தங்கம் தென்னரசு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share