×
 

45 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு நிலையம்! கோயம்பேட்டில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு!

சென்னை கோயம்பேட்டில் உள்ள மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை கோயம்பேட்டில் இயங்கி வரும் மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கடந்த 7 ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் இந்தச் சுத்திகரிப்பு நிலையத்தில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் அதிநவீனச் சுத்திகரிப்பு நடைமுறைகள், கழிவுநீர் மறுசுழற்சி முறைகள் மற்றும் அவற்றின் தற்போதைய செயல்பாட்டுத் திறன் குறித்துத் துறை சார்ந்த அதிகாரிகளிடம் முதலமைச்சர் மிக விரிவாகக் கேட்டறிந்தார்.

சென்னையின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீர், இந்த நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டுத் தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக அனுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிப்காட் நிறுவனத்திற்குச் சொந்தமான இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், வல்லம் வடகல், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் ஆகிய தொழிற்பேட்டைகளில் உள்ள முன்னணித் தொழிற்சாலைகளுக்குத் தினமும் சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வின் போது, இங்குச் சுத்திகரிக்கப்படும் நீரின் தரம் மிகச் சிறந்த அளவில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் விஜய், இந்நீரைப் பேருந்துகள், ரயில்கள் மற்றும் வாகனங்களைச் சுத்தப்படுத்துவதற்கும், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பெரிய மருத்துவமனைகள், உணவகங்கள் ஆகியவற்றில் இயக்கப்படும் மையப்படுத்தப்பட்ட குளிர்சாதன அமைப்புகளுக்கு பயன்படுத்துவதற்கும் உள்ள சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகளுடன் தீவிரமாக ஆராய்ந்தார்.

இதையும் படிங்க: தவெக-வில் இணைந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி! முதல்வர் வருகைக்காக கரூரில் மெகா ஆய்வு!

மேலும், நாள் ஒன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட இந்த கோயம்பேடு நிலையத்தை மேலும் மேம்படுத்துவது, புதிய நவீன தொழில்நுட்பங்களை புகுத்துவது மற்றும் எதிர்காலச் சென்னை மாநகரின் குடிநீர் மற்றும் மறுசுழற்சி நீர் தேவையைச் சமாளிக்க இத்தொழில்நுட்பங்களை மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்வது குறித்தும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆய்வை நிறைவு செய்து விட்டுப் புறப்பட்ட முதலமைச்சர் விஜய், வெளியே கனமழையையும் பொருட்படுத்தாமல் தங்களைக் காண்பதற்காக நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்களைக் கண்டு நெகிழ்ந்தார். உடனடியாகத் தானாகவே குடை பிடித்தபடி நடந்து சென்று, மழையில் நனைந்தபடி நின்ற மக்களுக்கு நேரில் கை அசைத்துத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு நிதி சீர்திருத்த குழு: மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share