×
 

தமிழ்நாடு நிதி சீர்திருத்த குழு: மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு!

மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில் தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் வருவாயைப் பெருக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் பெருமளவில் சரிந்துள்ளதைத் தொடர்ந்து, நிதியியல் கசிவுகளைத் தடுத்து மாநிலத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் மத்திய திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மொன்டேக் சிங் அலுவாலியா தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் 2026-இல் வெளியிடப்பட்ட நிதியியல் மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) விகிதம் 2025–26 நிதியாண்டில் 5.45 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த இரு பத்தாண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த அளவாகும். இந்தச் சரிவு காரணமாக ஆண்டிற்கு சுமார் ₹1.23 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

இது மாநிலத்தின் மொத்த நிதியிழப்பில் சுமார் 90 சதவீதத்திற்குச் சமமான தொகையாகும். இந்த வருவாய் இழப்பிற்குப் பொருளாதார மந்தநிலை காரணியாக இல்லாமல், வணிக வரி, முத்திரைத்தாள் மற்றும் பதிவுத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, மற்றும் கனிம வளத் துறைகளில் நிலவும் நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் முறைகேடுகளே முதன்மைக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு பணி வழங்குவது அரசின் கொள்கை முடிவு!

இதனைச் சீரமைக்க நிதியமைச்சகம் பிறப்பித்துள்ள அரசாணை மூலம் இந்த உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிபுணர் மொன்டேக் சிங் அலுவாலியா தலைவராகப் பொறுப்பேற்கும் இக்குழுவில், தேசிய பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் பேராசிரியர் டாக்டர் கே.பி. கிருஷ்ணன், வருமான வரிச் சட்டத்தைச் சீரமைக்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அர்பிந்த் மோடி, மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் முன்னாள் தலைவர் நஜீப் ஷா, தமிழக நிதித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ. சித்திக், மற்றும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் எம். சுரேஷ் பாபு ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நிதித் துறை இணைச் செயலாளர் ராஜா கோபால் சுன்கரா இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார்.

இக்குழுவிற்கு விரிவான பணி வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் வரி மற்றும் வரிசாரா வருவாயை உயர்த்தவும், அரச பொதுத்துறை நிறுவனங்களின் பங்காதாயம், நிலம் மற்றும் சொத்துக்களைக் பணமாக்குதல் போன்ற புதிய வருவாய் ஆதாரங்களைக் கண்டறியவும் இக்குழு பரிந்துரைகளை வழங்கும். மேலும், மதுபானக் கொள்கை மற்றும் வரிகளில் தேவையான மாற்றங்களை மேற்கொண்டு வருவாயைப் பெருக்குவதோடு, நவீனத் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி வரி ஏய்ப்பு மற்றும் கசிவுகளை முற்றுப்புள்ளியாக ஒழிப்பதற்கான வழிமுறைகளையும் ஆராயும். 3 மாத காலத்திற்குள் தனது இறுதிப் பரிந்துரை அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கவுள்ள இக்குழு, மாநில அரசின் எந்தவொரு துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தரவுகளையும் பெறவும், பிரத்யேகப் பணிக்குழுக்களை (Working Groups) உருவாக்கவும் முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மகளிருக்கு இலவச பயணம் இருக்கும் போது சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஏன் இல்லை? உயர் நீதிமன்றம் கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share