பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!
காமராஜர் காலை உணவுத் திட்டம் தொடக்கம்: மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட முதல்வர் விஜய்
சென்னையில் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். திருவான்மியூரில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், பாரம்பரிய பட்டுவேட்டி, சட்டை அணிந்து பங்கேற்ற முதலமைச்சர் விஜய், தனது கைகளாலேயே மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார். பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவாக வெண் பெங்கல், சாம்பார், பெங்கல் ஆகியவற்றை தனது கைகளாலேயே பரிமாறினார்.
இதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து முதலமைச்சர் விஜய் காலை உணவை சாப்பிட்டார். மாணவர்களுடன் கலந்துரையாடியபடி உணவு அருந்திய அவர், காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த காலை உணவுத் திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டு, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: “பிரியமுடன் ச.ஜோசப் விஜய்”... விடிந்ததும் பெற்றோர்களுக்கு சி.எம். விஜய் அனுப்பிய சர்ப்ரைஸ் மெசேஜ்... என்ன தெரியுமா?
ஏற்கனவே ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வந்த காலை உணவு திட்டத்திற்கு, தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்ததற்குப் பிறகு காமராஜரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது காமராஜர் காலை உணவு திட்டம் என்ற பெயரில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை நேர உணவு வழங்கும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்தம் 44,984 பள்ளிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பயன்பெற்று வந்த பள்ளிகளுடன் ஒப்பிடும்போது, இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம் கூடுதலாக 7,537 பள்ளிகள் பயன்பெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 34.64 லட்சம் மாணவர்கள், அதாவது 34 லட்சத்து 64 ஆயிரம் மாணவர்கள், காமராஜர் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர்.
இதில் 15 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களாக உள்ளனர். இவர்கள் இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர்.
மொத்தமாக காமராஜர் காலை உணவு திட்டத்திற்காக 724 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், இந்த விரிவாக்கத் திட்டத்திற்காக கூடுதலாக 217 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோருக்கு முதலமைச்சர் விஜய் பெயரில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது. அதில், “அன்பார்ந்த பெற்றோருக்கு வணக்கம், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகைப்புரிந்து சிறப்பாகக் கல்வி கற்பதற்கு ஏதுவாக சத்தான சுவையான காலை உணவு 22.09.2026 முதல் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பிரியமுடன் ச.ஜோசப் விஜய், தமிழ்நாடு முதலமைச்சர்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் பள்ளி வருகையை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் விஜய் நேரடியாக தொடங்கி வைத்ததுடன், மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டது நிகழ்ச்சியில் கவனம் பெற்றது.
மாணவர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்ட முதலமைச்சர் விஜயின் இந்த நிகழ்வு, தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
இதையும் படிங்க: மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!