தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்... அமைச்சர்களாக பொறுப்பேற்க போவது யார்?... உத்தேச பட்டியல் இதோ...!
வனத்துறை, வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள் துறை உள்ளிட்ட 25 இடங்கள் காலியாக உள்ளன.
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று காலை 10 மணிக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. 19 முதல் 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
தவெகவிற்கு கம்யூனிஸ்டு கட்சிகள், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ஐ.யூ.எம்.எல். கட்சிகள் ஆதரவு அளிக்கின்றன. அ.தி.மு.க.வில் இருந்து பிளவுபட்டு 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வை ஆதரிக்கின்றனர். ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்கள் போதும் என்ற நிலையில், சட்டசபையில் த.வெ.க.வின் பலம் 144 ஆக உள்ளது. இந்த ஆதரவுடன் தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் கடந்த 10ம் தேதி பதவியேற்றார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர் ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். தமிழக அமைச்சரவையை பொறுத்தவரை முதல்வருடன் சேர்த்து மொத்தம் 35 பேர் வரை இடம்பெறலாம். ஆனால் தற்போது வரை 10 பேர் மட்டுமே பொறுப்பில் உள்ளனர். வனத்துறை, வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள் துறை உள்ளிட்ட 25 இடங்கள் காலியாக உள்ளன.
இந்நிலையில் தான் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று முதல் முதலாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அதன்படி இன்று 19 முதல் 23 பேர் வரை அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். அதில் தவெகவில் 19 பேர் அமைச்சர்களாக வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சியில் 2 பேருக்கும், விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் 23 பேர் வரை அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!
தவெகவைப் பொறுத்தவரை என் மரிய வில்சன், இசிஆர் பி சரவணன் - சோழிங்கநல்லூர், எஸ். ரமேஷ் - ஸ்ரீரங்கம், முகமது ஃபர்வாஸ் - அறந்தாங்கி, சத்யபாமா - திருப்பூர் வடக்கு, விஜய்தமிழன் பார்த்திபன் - சேலம் தெற்கு, வி சம்பத்குமார் - கோவை வடக்கு, ரேவந்த் சரண் - மதுரவாயல், ஆர் விஜயசரவணன் - தஞ்சாவூர், எம்வி கருப்பையா- சோழவந்தான், பதுருதீன் (முஸ்தபா) - மதுரை மத்தி,ஸ்ரீநாத் - தூத்துக்குடி, ஆர்எஸ் முருகன் - திருநெல்வேலி, சதீஷ் கிறிஸ்டோபர் - ராதாபுரம் உள்ளிட்டோரது பெயர்கள் உத்தேச பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
தவெக உடன் உள்ள காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார், மதுரை மாவட்டம் மேலூர் எம்எல்ஏ விஸ்வநாதன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது உறுதியாகி உள்ளது. விசிகவை எடுத்து கொண்டால் 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். திண்டிவனம் தொகுதியில் வென்ற வன்னியரசு, காட்டுமன்னார் கோவில் தொகுதியில் வெற்றி பெற்ற ஜோதிமணி ஆகியோர் எம்எல்ஏக்களாக உள்ளனர். இதில் வன்னியரசுக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை எடுத்து கொண்டால் வானியம்பாடி தொகுதியில் சையத் பாரூக் பாஷா வெற்றி பெற்றுள்ளார். பாபநாசம் தொகுதியில் ஷாஜகான் வென்றுள்ளார். இவர்கள் 2 பேரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளது. இதில் ஷாஜகான் அமைச்சராக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் விசிக, ஐ.யூ.எம்.எல். எம்.எல்.ஏ.க்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்பார்களா? என்பதில் சந்தேகம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஷாக்கிங் வீடியோ...!! - ரீல்ஸ் மோகத்தில் தவெகவினர் செய்த காரியம்... அரசு அலுவலகத்திற்குள் நுழைந்து அட்ராசிட்டி...