×
 

தேர்தல் வழக்குகளுக்கு எதிர்ப்பு..! குழந்தைகளை வைத்து பிரச்சாரமா.? ஹைகோர்ட்டில் முதல்வர் மறுப்பு..!!

தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி முதல்வர் விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முக்கிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனக்கு எதிராக தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் அவர் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்குகளில் எழுப்பப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு விஜய் தரப்பு விரிவான விளக்கம் அளித்துள்ளது.தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகளை ஈடுபடுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என முதலமைச்சர் தரப்பு தெரிவித்துள்ளது.

பிரச்சாரக் கூட்டங்களில் குழந்தைகளை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிக்கும் செயல்பாடு எதுவும் நடைபெறவில்லை என்றும், அத்தகைய நடவடிக்கையில் தான் ஈடுபடவில்லை என்றும் உறுதியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளைப் பயன்படுத்தி பெற்றோரை செல்வாக்கு செலுத்தும் வகையில் பேசியதாகக் கூறப்படும் பேச்சுக்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வழிபாட்டுத்தலங்களில் சென்று பிரச்சாரம் செய்ததாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டும் ஆதாரமற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி அடையாளங்களுடன் தேவாலயங்களில் முட்டி போட்டு பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்தும் எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என விஜய் தரப்பு வாதிட்டுள்ளது. இத்தகைய குற்றச்சாட்டுகள் வெறும் அரசியல் நோக்கத்துடன் எழுப்பப்பட்டவை என்றும் அவை நீதிமன்றத்தில் நிலைக்கக்கூடியவை அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.தேர்தல் செலவு கணக்குகளை முறையாக தாக்கல் செய்யாமல் மறைத்ததாகவும், வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற்றதை மறைத்ததாகவும் கூறப்படும் புகார்களுக்கும் எந்தவித ஆதாரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உலக மருத்துவ மைல்கல்... சென்னையில் நுண்துளை கருவிழி சிகிச்சை மையம்.. திறந்து வைத்து பார்வையிட்ட முதல்வர் விஜய்.!!

வேட்புமனுவில் சமர்ப்பிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் உண்மையானவை என்றும், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு ஏற்ப அனைத்து கணக்குகளும் சமர்ப்பிக்கப்பட்டன என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரி தொடர்பான நிலுவை விவகாரங்கள் குறித்தும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.குழந்தைகளைப் பயன்படுத்தியதற்காக மட்டும் ஒரு வேட்பாளரின் வெற்றியை செல்லாததாக அறிவிக்க முடியாது என முதலமைச்சர் தரப்பு வாதிட்டுள்ளது. தேர்தல் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகள் நிலைநிறுத்தப்படாவிட்டால் வெற்றியை ரத்து செய்யும் அளவுக்கு அவை போதுமானவை அல்ல என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்ட விஷயங்கள் அனைத்தும் சட்ட வரம்புக்குள் அமைந்தவை என்றும், எந்தவித தவறான செல்வாக்கும் செலுத்தப்படவில்லை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: அமித் ஷாவுக்கு வீட்டு மசாலா பொடி.. மத்திய அரசை விமர்சிக்கக் கூடாதாம்! விஜய்யின் அதிரடி ஆர்டர்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share