இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழர்கள்..! ஊக்கத் தொகை வழங்கி வாழ்த்திய முதல்வர் விஜய்..!!
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்தினார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் போட்டியிட்டு பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களை கௌரவிக்கும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஊக்கத்தொகைகளை வழங்கினார். இந்தப் போட்டிகளில் இந்தியா மொத்தம் 39 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்தப் பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்திருந்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று வீரர்கள் தனிப்பட்ட முறையில் சாதனை படைத்திருந்தனர்.
ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்குதல் பிரிவில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். அதேபோல், ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல் 16.58 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வபிரபு திருமாறன் 16.52 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
ஒரே போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்தது.தாயகம் திரும்பிய ராஜா முத்துப்பாண்டி மற்றும் செல்வபிரபு ஆகியோர் இன்று முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். பிரவீன் சித்ரவேல் இன்னும் நாடு திரும்பாத காரணத்தால், அவரது தந்தை இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கு பாதிப்பு... காவலர் நியமனம் ஏன் தாமதம்..? உதயநிதி ஸ்டாலின் கேள்வி..!!
இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாடு அரசின் சார்பில் மொத்தம் ரூ.80 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார். வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சமும், பிரவீன் சித்ரவேலுக்கு ரூ.30 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்ற செல்வபிரபுவுக்கு ரூ.20 லட்சமும் வழங்கப்பட்டன.இந்த நிகழ்வில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, விளையாட்டுத் துறைச் செயலாளர் மற்றும் பிற அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மீன்பிடி தடை கால நிவாரணத் தொகை குறைப்பு..? மீனவர்கள் அதிருப்தி..! விளக்கிய TN FACT CHECK..!!