×
 

"என் நெஞ்சில் குடியிருக்கும்"..! தவெகவுக்கு தனிப் பெரும் அங்கீகாரம்... முதல்வர் விஜய் பெருமிதம்..!!

தவெகவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக அங்கீகாரம் கொடுத்திருப்பதை முதல்வர் விஜய் பெருமையுடன் தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழகம் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாகவும், விசில் சின்னம் அங்கீகரிக்கப்பட்ட சின்னமாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்ததை தமிழக முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தனது நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். முப்பதாண்டுகளுக்கும் மேலாக அளவற்ற அன்பை வாரி வழங்கி, வாழ்வில் கிடைத்தற்கரிய ஓர் உயரிய இடத்தைப் பேரன்புடன் தந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக, உறவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக ஒவ்வோர் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரு நிரந்தர இடத்தை வழங்கி, தாயன்புடன் தாங்கி வரும் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

எல்லாவற்றையும் அளித்த ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழ் உறவுகளுக்கும் தனது நன்றியை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று யோசித்ததாகக் கூறிய விஜய், அதன் வெளிப்பாடாகவே உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே 2024-இல் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியதாகத் தெரிவித்தார். மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் அரசியல் களம் கண்டே 27 மாதங்கள்தான் ஆகின்றது என்றும், ஆனால் அதற்குள் தமிழக அரசியல் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டியதாக மக்களைப் பாராட்டினார்.

35 சதவீத வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாகத் தமிழக வெற்றிக் கழகத்தை உயர்த்திப் பிடித்த மக்களின் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன், தமிழக மக்களின் முதல் சேவகனாக, முதலமைச்சராக இன்று பதவி ஏற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை லட்சியமாகக் கொண்டு, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி அமைத்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சியை நிறுவிக் காட்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சி.எம்.விஜய் லண்டன் பயணம்... கை கொடுக்குமா? காலை வாரிவிடுமா? - நேரம் பார்த்து சீண்டிய ஆர்.பி.உதயகுமார்... !

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பேரதிசயத்தை மக்கள் நிகழ்த்திக் காட்டியதன் வெளிப்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்தை தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளதாகவும், ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய விசில் சின்னத்தையும் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமாக அங்கீகரித்துள்ளதாகவும் மகிழ்வுடன் அறிவித்தார். மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் நம்மை நம்புகிற ஒட்டுமொத்த மக்களுக்கான நன்றிக்கடன் பணி என்றென்றும் தொடரும் என்று உறுதியளித்த விஜய், பேருழைப்பைத் தந்து கழகம் காக்கும் தோழர்களையும் நிர்வாகிகளையும் நெகிழ்வுடன் நினைத்துப் பார்த்து, அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்தார்.

 

இதையும் படிங்க: புதிய சட்டமன்றத்திற்கு எதிர்ப்பு..! இருப்பதை வைத்து நல்ல ஆட்சி தாங்க..! கனிமொழி எம்பி காட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share