மாலத்தீவில் கைதான 25 தூத்துக்குடி மீனவர்களை மீட்க வேண்டும்! மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்!
மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்கள் 25 பேரை விடுவிக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காகச் சென்ற தூத்துக்குடி தருவைகுளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், சர்வதேசக் கடல் எல்லைப் பகுதியில் மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுச் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தமிழக மீனவக் கிராமங்களில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 பாரம்பரிய மீனவர்கள் தங்களது மீன்பிடிப் படகுகளுடன் அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள தகவல் மிகுந்த வேதனையளிக்கிறது.
இதையும் படிங்க: இஸ்லாமியர்களின் உரிமைக் குரலாக ஒலிப்போம்... அமைச்சர் ராஜ்மோகன்..!
பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள இந்த ஏழை மீனவர்கள், சர்வதேச கடல் எல்லைகளைத் திட்டமிட்டு அத்துமீறவில்லை. எதிர்பாராத நீரோட்டங்கள் மற்றும் காற்றின் வேகம் காரணமாக அவர்கள் வழிமாறிச் சென்றிருக்கக்கூடும். இத்தகைய சூழலில், மாலத்தீவு பாதுகாப்புப் படையினர் அவர்களைக் கைது செய்து அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்திருப்பது அவர்களது குடும்பத்தினரைத் தாங்க முடியாத மன உளைச்சலுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாக்கியுள்ளது.
எனவே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். மாலத்தீவில் உள்ள இந்தியத் தூதரகம் வழியாக அந்நாட்டு அரசுடன் உரிய தூதரக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு, கைது செய்யப்பட்டுள்ள 25 தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகளையும் எவ்வித நிபந்தனையுமின்றி விரைவாக விடுவித்து, அவர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வர ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: அம்பத்தூர் Capitaland திறப்பு விழாவில் விஜய் உருட்டிய அன்னாசி பழம்!! பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய கதை என்ன?