×
 

ஊழியர் வீட்ல நடந்த சோதனை! தேவையில்லாமல் CMC பெயரை இழுக்க வேண்டாம் என நிர்வாகம் வேண்டுகோள்!

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியரின் தனிப்பட்ட குடியிருப்பில் நடந்த அமலாக்கத்துறை ஆய்வை மருத்துவமனையுடன் இணைக்க வேண்டாம் என இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.

வேலூர் சி.எம்.சி மருத்துவமனை வளாகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஒரு ஊழியரின் தனிப்பட்ட குடியிருப்பில் நடந்த ஆய்வை மருத்துவமனையுடன் இணைப்பது தவறானது என இயக்குநர் விக்ரம் மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

வேலூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி (CMC) மருத்துவமனை வளாகத்தில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக இன்று காலை முதல் ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாகச் சி.எம்.சி இயக்குநர் டாக்டர் விக்ரம் மேத்யூஸ் விரிவான விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த விளக்கத்தில், சி.எம்.சி வேலூரில் அமலாக்கத்துறை நடவடிக்கை நடைபெற்று வருகிறது என வெளியிடப்பட்ட சமீபத்திய செய்திகள் அனைத்தும் முழுமையாகத் தவறானவை மற்றும் பொய்யானவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சி.எம்.சி வளாகத்திற்குள் எந்தவிதமான அமலாக்கத்துறை சோதனையோ, விசாரணையோ அல்லது இதர சட்டப்படியான நடவடிக்கைகளோ நடைபெறவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், மருத்துவமனை நிறுவனம் எப்போதும் போலத் தடையின்றி இயல்பாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: #BREAKING: மருந்து கொள்முதலில் முறைகேடா? வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!!

இன்று காலை ஒரு பணியாளருக்குக் குடியிருப்பு வசதிக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட குடியிருப்பில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள நிர்வாகம், அந்த நடவடிக்கைக்கும் சி.எம்.சி மருத்துவமனைக்கும் அல்லது அதன் செயல்பாடுகளுக்கும் எந்தவிதமானத் தொடர்பும் கிடையாது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு தனிநபரின் குடியிருப்பில் நடந்த நிகழ்வைச் சி.எம்.சி மருத்துவமனையில் நடைபெறும் சோதனையாகச் சித்தரிப்பது உண்மைக்குப் புறம்பானது என்றும், இது பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை விளைவிக்கும் என்றும் வருத்தம் தெரிவித்துள்ளது.

எனவே, அனைத்து ஊடக நிறுவனங்களும் மற்றும் பொதுமக்களும் சி.எம்.சி தொடர்பாக வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும், உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தாத தகவல்களைச் சமூக வலைதளங்களிலோ அல்லது செய்தித் தாள்களிலோ பரப்ப வேண்டாம் என்றும் இயக்குநர் விக்ரம் மேத்யூஸ் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். சி.எம்.சி போன்ற ஒரு மிகப்பெரிய சேவை நிறுவனத்தின் நற்பெயருக்குக் களம் விளைவிக்கும் வகையில் இத்தகைய செய்திகள் வெளியிடப்படக்கூடாது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: #BREAKING: மருந்து கொள்முதலில் முறைகேடா? வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share