கோவையில் பரபரப்பு: கெமிக்கல் கடை தீ விபத்தில் சிக்கிய 40 பேர் மீட்பு! மக்கள் அலறியடித்து ஓட்டம்!
கோவை காட்டூர் பட்டேல் ரோட்டில் உள்ள இயந்திர உதிரிபாகக் கடையில் இன்று மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
கோவை காட்டூர் பகுதியில் உள்ள மக்கள் நெருக்கம் மிகுந்த பட்டேல் ரோட்டில் இன்று மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஒட்டுமொத்த நகரையும் பதற்றத்தில் ஆழ்த்தியது. அங்குள்ள மாதேஸ்வரி இயந்திர உதிரிபாகங்கள்' விற்பனை கடையில் ஏற்பட்ட இந்த விபத்தில், கடையில் இருந்த ஆயில் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வெடித்துச் சிதறியதால் தீ மளமளவென அடுத்தடுத்த குடியிருப்புகளுக்கும் பரவியது. எனினும், தீயணைப்புத் துறை மற்றும் ராணுவப் படையினரின் துரித செயல்பாட்டால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
மாலை 5:30 மணியளவில் தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், கோவை மாநகர தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குறுகலான வீதிகள் என்பதால் வாகனங்கள் உள்ளே செல்வதில் சவால்கள் நீடித்தன. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, சூலூர் விமானப்படை தளம், கடற்படை மற்றும் கோவை விமான நிலையத்திலிருந்து பிரத்யேக நுரை உமிழும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தண்ணீர் லாரிகள் இந்த மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இதையும் படிங்க: கோவை பெரியார் அறிவுலகம்: பிப்ரவரி 10-க்குள் பணிகள் நிறைவடையும்.. அமைச்சர் எ.வ.வேலு அதிரடி!
கட்டிடத்தின் உயரமான பகுதிகளுக்குத் தீ பரவியதை அடுத்து, தீயணைப்புத் துறையின் 'ஸ்கை லிஃப்ட்' வாகனம் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் வீரர்கள் உயரத்தில் இருந்து தண்ணீரைப் பாய்ச்சி தீயைக் கட்டுப்படுத்தினர். இதற்கிடையில், அருகில் இருந்த வீடுகளில் வசித்த சுமார் 30 முதல் 40 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும், கடையில் இருந்த சிலிண்டர்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் பெரும் வெடிப்பு விபத்துகள் தடுக்கப்பட்டன.
இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாநகரக் காவல் ஆணையர் மற்றும் உள்ளூர் எம்பி, மேயர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இரண்டரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. மின்கசிவு காரணமா அல்லது வெல்டிங் பணிகளின் போது ஏற்பட்ட கவனக்குறைவா என்பது குறித்து சிபிசிஐடி பாணியில் விரிவான விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே உள்ள பாதுகாப்பு விதிகளை (SOP) பொதுமக்கள் முறையாகப் பின்பற்றினாலே இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கலாம் எனத் தீயணைப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவை மாணவி வன்கொடுமை வழக்கு: செல்போன் ஆதாரங்களுடன் 270 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!