×
 

வண்டியை நிறுத்துங்க!! கோவையில் பேருந்து கதவில் சிக்கிய பெண்!! அலறிய பயணிகள்! ஓட்டுநர், நடத்துனருடன் வாக்குவாதம்!

பயணிகள் அனைவரும் முழுமையாக பேருந்தில் ஏறுவதற்கு முன்பாகவே பின்புற ஆட்டோமேட்டிக் கதவு மூடப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பேருந்தும் இயக்கப்பட்டதாக தெரிகிறது.

கோவை: அரசு டவுன் பேருந்தில் பயணிகள் ஏறிக்கொண்டிருந்தபோது ஆட்டோமேட்டிக் கதவு திடீரென மூடியதில் பெண் பயணி ஒருவரின் முகம் மற்றும் மூக்கு கதவுக்கு இடையில் சிக்கி பலத்த காயமடைந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பேருந்து பயணிகளின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

உக்கடத்தில் இருந்து சோமனூர் நோக்கி 30எச் வழித்தடத்தில் சென்ற அரசு டவுன் பேருந்து, வெள்ளிக்கிழமை இரவு கோவை–திருச்சி சாலையில் உள்ள இருகூர் பிரிவு பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்றதாக கூறப்படுகிறது. அப்போது பேருந்தின் பின்பக்க படிக்கட்டு வழியாக வயதான பெண்கள் உள்ளிட்ட பயணிகள் பேருந்தில் ஏறிக்கொண்டிருந்தனர்.

பயணிகள் அனைவரும் முழுமையாக பேருந்தில் ஏறுவதற்கு முன்பாகவே பின்புற ஆட்டோமேட்டிக் கதவு மூடப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பேருந்தும் இயக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்த பெண் பயணியின் முகம் மற்றும் மூக்கு கதவுகளுக்கு இடையில் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி விடுமுறை எதிரொலி! விமான டிக்கெட் விர்ர்.. ரூ.6,500 டிக்கெட் ரூ.16,661க்கு விற்பனை!

இதனால் அவரது மூக்கு மற்றும் வாய் பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியதாக பயணிகள் தெரிவித்தனர். பேருந்து நகரத் தொடங்கியதால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் உடனடியாக சத்தமிட்டு பேருந்தை நிறுத்தச் செய்தனர்.

பேருந்து நின்றதும், சம்பவத்தைக் கண்ட பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பயணிகள் ஏறிக்கொண்டிருப்பதை கவனிக்காமல் பேருந்தை இயக்கியது குறித்து அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த சம்பவத்தால் இருகூர் பிரிவு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியதுடன், போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அரசு பேருந்துகளில் ஆட்டோமேட்டிக் கதவுகள் மற்றும் பயணிகள் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக கண்காணிக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னைக்கு மாற்றாக 2வது தலைநகரம்? தமிழகத்தில் மீண்டும் எழும் முக்கிய கோரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share