×
 

சென்னைக்கு மாற்றாக 2வது தலைநகரம்? தமிழகத்தில் மீண்டும் எழும் முக்கிய கோரிக்கை!

புதிய நிர்வாக நகரில் முக்கிய அரசு அலுவலகங்கள், அவசரகால கட்டுப்பாட்டு மையங்கள், ஆவணக் காப்பகங்கள், தரவு மையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டமைப்புகளை படிப்படியாக ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை: இயற்கை பேரிடர் காலங்களில் சென்னைக்கு மாற்றாக அரசின் நிர்வாகப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில், தமிழகத்தில் 2வது நிர்வாக தலைநகரை உருவாக்க வேண்டும் என கோவை கவுசிகா நீர் கரங்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சென்னை கடல் மட்டத்துக்கு அருகில் அமைந்துள்ளதால், புயல், கனமழை, வெள்ளம், கடல் மட்ட உயர்வு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், தமிழக அரசின் முக்கிய அலுவலகங்கள், ஆவணக் காப்பகங்கள், தரவு மையங்கள் உள்ளிட்ட நிர்வாக கட்டமைப்புகள் பெரும்பாலும் சென்னையில் அமைந்திருப்பது சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கவுசிகா நீர் கரங்கள் அமைப்பின் நிறுவனர் செல்வராஜ், தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தின் புவியியல் அமைப்பு மற்றும் பேரிடர் அபாயங்களை முழுமையாக ஆய்வு செய்து, பாதுகாப்பான இடத்தில் 2வது நிர்வாக தலைநகரை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: ஆயுத பூஜை, தீபாவளிக்கு டிக்கெட் விலை எகிறுமா? ஆம்னி பஸ்களுக்கு தமிழக அரசு அதிரடி செக்!

புதிய நிர்வாக நகரில் முக்கிய அரசு அலுவலகங்கள், அவசரகால கட்டுப்பாட்டு மையங்கள், ஆவணக் காப்பகங்கள், தரவு மையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டமைப்புகளை படிப்படியாக ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிகப்பெரிய அளவில் பேரிடர் ஏற்பட்டாலும், அரசின் முக்கிய நிர்வாகப் பணிகள் தடையின்றி நடைபெறும் வகையில் இந்த மையம் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு ஆவணங்கள் மற்றும் முக்கிய தரவுகளுக்கு மாற்று காப்பு மையங்களை உருவாக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. நிர்வாகம், பேரிடர் மேலாண்மை, நகரமைப்பு, புவியியல், காலநிலை மாற்றம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பேரிடர் ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட, பேரிடருக்கு முன்பே நிர்வாக ரீதியாக தயாராக இருப்பது அவசியம் என்றும், தமிழகத்தின் எதிர்கால பாதுகாப்பை கருத்தில் கொண்டு 2வது நிர்வாக தலைநகருக்கான ஆய்வுகளை முன்னுரிமையுடன் தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டாஸ்மாக் கடையடைப்பு... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share