×
 

“DMK ஆட்சி… மதுரை மாநகராட்சியில் கலெக்ஷன்-கரப்ஷன்-கமிஷன்! செல்லூர் ராஜூ தாக்கு!!

மதுரை மாநகராட்சி ஊழலின் மொத்த உருவமாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை மாநகராட்சியில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் ₹200 கோடி சொத்துவரி முறைகேடு, நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமை ஆகியவற்றைக் கண்டித்து, அதிமுக சார்பில் மதுரையில் இன்று (டிசம்பர் 17) பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழங்காநத்தம் ரவுண்டானாவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமை தாங்கினார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு திமுக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, மதுரை மாநகராட்சியின் தற்போதைய நிலையை மிகக் கடுமையாக விமர்சித்தார். மதுரை மாநகராட்சி மேயர் ராஜினாமா செய்து இரண்டு மாதங்களாகிவிட்டது. மண்டலத் தலைவர்கள் 5 பேர் ராஜினாமா செய்து 5 மாதங்களாகிவிட்டது. கடந்த 3 மாதங்களாக மாமன்றக் கூட்டம் நடைபெறாததால், மற்ற உறுப்பினர்களின் பதவியும் பறிபோகும் அபாயம் உள்ளது. உடனடியாக மேயர் தேர்தலை நடத்த வேண்டும்.

இதையும் படிங்க: இந்து - இஸ்லாமியர்கள் அண்ணன் தம்பிகளாக வாழ்கிறோம் - எங்களுக்கு அரசியல் நோக்கம் இல்லை - செல்லூர் ராஜு விளக்கம்!

தேர்தல் வர இன்னும் 80 நாட்களே உள்ள நிலையில், ஊழலை மறைக்க திமுக இப்போது மதுரையின் மீது கவனம் செலுத்துவது போல் நடிக்கிறது. அதிமுக கார் அல்ல, அது கோட்டைக்குச் செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ். 2026-ல் அதிமுக ஆட்சியே அமையும். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது உரையில், மாநகராட்சி நிர்வாகத்தில் நிலவும் ஊழலைச் சுட்டிக்காட்டினார்:

அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டைத் திமுக மறந்துவிட்டது. இப்போது திமுக என்றால் கலெக்ஷன், கமிஷன், கரெப்ஷன் என்றாகிவிட்டது. அமைச்சர் கே.என். நேரு 7.5% முதல் 10% வரை கமிஷன் கேட்பதாக மக்களே பேசுகிறார்கள்.

மதுரை விமான நிலையத்தைச் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்துவோம் என்று கூறிய அமைச்சர் பி.டி.ஆர். இதுவரை அதைச் செய்யவில்லை. ஆனால், திருச்சி விமான நிலையம் முன்னேறிவிட்டது. மதுரைக்கு மெட்ரோ திட்டம் மற்றும் டைடல் பார்க் திட்டம் வராமல் திமுக தடுத்து வருகிறது.

மதுரை மாநகராட்சிக்குள் சென்றாலே 'பணம் எங்கே?' என்று கேட்கும் நிலைதான் உள்ளது. 2026-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், இந்த ஊழல்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.

மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பு மென்பொருளைத் (UTIS) தவறாகப் பயன்படுத்தி, நூற்றுக்கணக்கான கட்டிடங்களுக்கு வரியைக் குறைத்து நிர்ணயம் செய்ததன் மூலம் சுமார் ₹200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மேயரின் கணவர் பொன் வசந்த் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஊழல் காரணமாகவே மேயர் மற்றும் மண்டலத் தலைவர்கள் ராஜினாமா செய்யும் நிலை உருவானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அடேங்கப்பா... திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 1.20 கோடி பிளேடு நன்கொடை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share