போதைப்பொருள் வழக்கில் சிக்கிய ஸ்ரீகாந்த், கிருஷ்ணா.. நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் அதிரடி..!
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.
அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவர் யார் யாருக்கு போதைப்பொருட்களை வினியோகம் செய்துள்ளார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் தமிழில் ரோஜாக்கூட்டம் திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்துக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் வைத்து போதை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். பிரசாத் இடம் போதைப்பொருள் வாங்கியது, அவரிடம் செல்போனில் பேசியது, போதைப்பொருள் வாங்க பணம் அனுப்பியது உள்ளிட்ட விவரங்கள் செல்போன் மூலம் அம்பலமானது.
இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் போதைப்பொருள் வழக்கு.. சிக்கிய கூட்டாளிகள்.. தொடரும் கிடுக்கிப்பிடி விசாரணை..!
மேலும் நடிகர் ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்து எட்டு காலி பாக்கெட்டுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை தொடர்ந்து கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. இதனையடுத்து நடிகர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர். போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டது.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 7-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் தனித்தனியே ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி தர்மேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது 2 பேருக்கும் ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்களை சென்னை போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனையடுத்து இருவர் தரப்பிலும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள், நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை வழக்கின் புலன் விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை இருவருக்கும் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் போதைப்பொருள் வழக்கு.. சிக்கிய கூட்டாளிகள்.. தொடரும் கிடுக்கிப்பிடி விசாரணை..!