தவெக-விற்கு ஆதரவா? காங்கிரஸ் மேலிடம் அதிரடி உத்தரவு.. கோட்டையை நெருங்கும் விஜய்!
தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பது பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் முடிவெடுக்க தேசியத் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கான அடுத்தக்கட்ட நகர்வுகளில் வேகம் காட்டி வருகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் சில எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சியிடம் தவெக தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக ஆதரவு கோரியுள்ளார்.
விஜய்யின் இந்த அதிரடி அழைப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் டெல்லியில் இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழகத்தில் ஆட்சி அமைக்க இந்திய தேசிய காங்கிரஸின் ஆதரவைக் கோரியுள்ளார். தமிழக மக்களின் தீர்ப்பு ஒரு மதச்சார்பற்ற, அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் அரசிற்கானது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. பாஜக அல்லது அதன் நிழல் சக்திகள் தமிழகத்தில் ஊடுருவுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம்.
இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு (TNCC) தேசியத் தலைமை வழங்கியுள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளையும், தற்போதைய அரசியல் சூழலையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க மாநிலத் தலைமைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் 5 இடங்களை வென்றுள்ள காங்கிரஸ், தற்போது தவெக-விற்கு ஆதரவு அளிப்பது பற்றித் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
இதையும் படிங்க: பணநாயகத்தை வீழ்த்திய தமிழக மக்கள்: தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சியான நன்றி அறிக்கை!
விஜய்யின் "ஆட்சியில் பங்கு" என்ற வாக்குறுதி காங்கிரஸை வெகுவாக ஈர்த்துள்ளது. 1967-க்குப் பிறகு தமிழக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பிடிக்க இது ஒரு பொன்னான வாய்ப்பாகக் கருதப்படுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விரைவில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, தவெக-விற்கு அளிக்கும் ஆதரவு நிபந்தனையற்றதா அல்லது அமைச்சரவையில் இடம் பெறுவதா என்பது குறித்து அறிவிக்க உள்ளனர்.
தவெக-விற்குத் தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 10 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது. காங்கிரஸ் (5) ஆதரவு அளிக்கும் பட்சத்தில், இடதுசாரிகள் மற்றும் பிற சிறிய கட்சிகளின் ஆதரவைத் திரட்டுவது விஜய்க்கு எளிதாகிவிடும். மே 7-ம் தேதி ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசியலில் அரைநூற்றாண்டு காலத் திராவிடக் கோட்டைகளைச் சரித்து, காங்கிரஸ் ஆதரவுடன் விஜய் 'புதிய தமிழகத்தை' உருவாக்குவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: சென்னை வருகிறார் தமிழக பொறுப்பு கவர்னர்.. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!