×
 

காவிரி நீர் தராவிட்டால் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்! ஜெகன்மூர்த்தி அதிரடி!

தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்காவிட்டால் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் எனப் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு உரியக் காவிரி நீரை கர்நாடகா வழங்கத் தவறினால், தமிழக வெற்றிக் கழக அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் உடனடியாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் எனப் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி அதிரடியாக வலியுறுத்தியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில், 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நிழல் நிதிநிலை அறிக்கையை புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி இன்று முறைப்படி வெளியிட்டார். அதன் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பல்வேறு சுடச்சுட அரசியல் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெகன் மூர்த்தி, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மற்ற துறை திட்டங்களுக்குத் திருப்பிவிட்டு முறைகேடாகச் செலவிட்டார்கள். ஆனால், தற்போது அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசு அந்தத் தவறைச் செய்யாமல், ஆதிதிராவிடர் நலத்துறைக்கென ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக அந்த சமூக மக்களின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்த வேண்டும். நாங்கள் தயாரித்துள்ள இந்த நிழல் பட்ஜெட்டை முதலமைச்சர் விஜயைச் நேரில் சந்தித்து வழங்க முயற்சி மேற்கொள்வோம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவு..! கர்நாடகாவுக்கு செக்... மேலாண்மை ஆணையம் அதிரடி..!!

தொடர்ந்து காவிரி மற்றும் மேகதாது விவகாரம் குறித்துப் பேசிய அவர், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா எதையும் செய்துவிட முடியாது. எனவே, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கத் தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால், தமிழக அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் பிரதிநிதிகள் அங்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தித் தண்ணீரைக் கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டிற்கு உரிய நீரைக் கர்நாடகா தரவில்லையென்றால், தவெக அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அமைச்சர்கள் இருவரும் உடனடியாகத் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கெடு விதித்தார்.

மேலும், கூட்டணி குறித்து பேசிய ஜெகன் மூர்த்தி, அதிமுக உடனான எங்கள் கூட்டணி கடந்த தேர்தலோடு முடிந்துவிட்டது. தற்போது நாங்கள் எந்தவொரு கூட்டணியிலும் இல்லை. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதா என்பது குறித்துத் தேர்தல் அறிவிக்கப்படும் நேரத்தில் முடிவு செய்யப்படும். அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதே மரபு; மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விழாவில் அதை மூன்றாவதாகப் பாடியது முற்றிலும் தவறானது எனத் தனது காரசாரமான கருத்துக்களைப் பதிவு செய்தார். ஜெகன் மூர்த்தியின் இந்தப் பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: கர்நாடகாவை நம்புறது WASTE..! அனைத்து கட்சி கூட்டம்..! தமிழக அரசுக்கு திருமா. கோரிக்கை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share