×
 

காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

காவிரி விவகாரத்தில் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி முதலமைச்சர் அனைவரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என கொமதேக பொதுச்செயலாளர் ஈ ஆர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்

காவிரி நீர்ப் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மௌனம் சாதிக்காமல், உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தலைவர்களின் கருத்துக்களைக் கேட்டறிய வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்டத் தியாகி தீரன் சின்னமலையின் மணிமண்டபத்தில், அவரது நினைவு நாளை முன்னிட்டு 2,000-க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்று ஈ.ஆர்.ஈஸ்வரன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது தியாகப் பாதையில் பயணிப்போம் என நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம். அவர் அனைத்துத் தரப்பு மக்களையும் கட்சிகளையும் அரவணைத்து ஆட்சி செய்தவர். தமிழ்நாட்டிலும் அதுபோன்ற அரசியல் சூழல் உருவாக வேண்டும். வழக்கமாகத் தீரன் சின்னமலை விழாவில் அரசுத் துறைகளின் சார்பில் பொருட்காட்சியும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு அத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. வரும் ஆண்டுகளில் தவெக அரசு இந்த நடைமுறையைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

காவிரியில் ஆடிப்பெருக்கு (ஆடி 18) விழாவின் போது கூட ஆற்றில் தண்ணீர் வராமல், மக்கள் குழாய் தண்ணீரில் நீராடும் அவல நிலை ஏற்பட்டது மிகுந்த வருத்தமளிக்கிறது. கர்நாடக அரசு தானாக முன்வந்து தண்ணீர் விடத் தயாராக இல்லை; இயற்கையாக மழை பெய்தால் மட்டுமே நமக்குத் தண்ணீர் கிடைக்கும் என்ற சூழல் உள்ளது. பிரதமருக்குக் கடிதம் எழுதுவதால் மட்டும் எந்தப் பயனும் விளைந்துவிடப் போவதில்லை.

இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்திற்கு பாரத ரத்னா! பிரதமர் மோடியை சந்தித்து எல்.கே. சுதீஷ் எம்பி  கோரிக்கை!

மத்திய அரசு ராணுவத்தை அனுப்பித் தண்ணீரைத் திறந்துவிடப் போவதில்லை. கர்நாடகாவில் உள்ள தேசியக் கட்சிகள் இதைத் தங்களது சுய அரசியலுக்காகப் பயன்படுத்தி வருகின்றன. மேகதாது விவகாரத்தில் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதைத் தவிர்த்து, தமிழ்நாடு அரசு தீவிரமான சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். முதலமைச்சர் மேகதாது பிரச்சனை குறித்துப் பேசுவதை ஏன் தவிர்க்கிறார் எனத் தெரியவில்லை. நீர்வளத்துறை அமைச்சரும் அமைதி காக்கிறார். ஆனால், கர்நாடக முதலமைச்சரோ அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அம்மாநிலத்திற்கு ஆதரவாகத் தீவிர அழுத்தம் கொடுத்து வருகிறார். எனவே, தமிழ்நாட்டிலும் முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

மின்வெட்டு, தவறான மின்கட்டணக் கணக்கீடு போன்ற துறை ரீதியானப் பிரச்சனைகளைச் சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல், எதற்கெடுத்தாலும் திமுகவை திட்டிக் கொண்டு மட்டுமே அமைச்சர் நிர்மல் குமார் போன்றவர்கள் காலத்தைக் கடத்துகிறார்கள். அமைச்சர்கள் தங்களது துறை சார்ந்த பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

மழைக்காலங்களில் நீலகிரிப் பகுதியிலிருந்து கேரளா வழியாக வீணாகக் கடலில் கலக்கும் மழைநீரைப் பவானிசாகர் அணைக்குக் கொண்டு வரும் வகையில், 'பாண்டியாறு - புன்னம்புழா' திட்டத்தை அரசு போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என ஈ.ஆர்.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: காவிரி பிரச்சினை தவெக பிரச்சினை அல்ல! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி வலியுறுத்தல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share