×
 

காவிரி பிரச்சினை தவெக பிரச்சினை அல்ல! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி வலியுறுத்தல்!

மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் கர்நாடகா செல்வது வீண் என்றும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

காவிரி நீர் மேலாண்மை மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிப் பிரதமரைச் சந்தித்து அழுத்தம் தர வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் முனைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்றுவிட்டு டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.  

கர்நாடக அணைகளில் தற்போது 68 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. அடுத்த 20 நாட்களுக்குத் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைக் கர்நாடக அரசு உடனடியாகத் திறந்துவிட வேண்டும் எனக் காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்ட போதிலும், தங்களிடம் தண்ணீர் இல்லை எனக் கூறி நீரைத் திறந்துவிடக் கர்நாடகா மறுத்து வருகிறது. காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காத கர்நாடக அரசை நேரில் சந்தித்துப் பேசுவதால் தமிழ்நாட்டிற்கு எவ்விதப் பிரயோஜனமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.  

இதையும் படிங்க: மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்! முதலமைச்சருக்கு தொல். திருமாவளவன் கோரிக்கை!

மேகதாது அணை கட்டுவதற்குத் தேவையான சுற்றுச்சூழல் அனுமதி கர்நாடகாவிற்கு அளிக்கப்பட்டுள்ளதா எனக் தாம் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, அத்தகைய அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என்று மத்திய அரசுத் தெளிவுபடுத்தியுள்ளதாக அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டினார்.  

கர்நாடகா 6-இல் ஒரு பங்கு தண்ணீரைக் கூடத் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட மறுத்து, திட்டமிட்டுப் பதற்றமான சூழலைத் தூண்டிவிட்டு வருகிறது. காவிரிப் பிரச்சினை என்பது ஏதோ தவெக-வின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல; இது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினை. எனவே, மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதில் தமிழ்நாடு அரசுக்கு என்ன தயக்கம்? எனக் கேள்வி எழுப்பினார்.  

முதலமைச்சர் விஜய் கர்நாடகா சென்றால் அவர்கள் தண்ணீரைத் திறந்து விடுவார்கள் என்று நினைப்பது தவறானது எனச் சாடிய அவர், தமிழ்நாடு அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி உரிமையைப் பெற வேண்டும் என்றும், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்துச் சென்று பிரதமரைச் சந்தித்து மேகதாது திட்டத்தைக் கைவிட அழுத்தம் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  

இதையும் படிங்க: தமிழ்நாடு முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் தயார்! மேகதாதுவை நேரில் பார்க்க டி.கே.சிவகுமார் அழைப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share