அதிகாரிகள் அலட்சியம்: ₹3.25 கோடி இழப்பீட்டை வழங்க தாமதம்! மதுரை வட்டாச்சியர் அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்!
மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீட்டுதொகையை வழங்கத் தாமதப்படுத்திய, சிறப்பு வட்டாச்சியர் அலுவலகத்தை நீதிமன்ற பணியாளர்கள் ஜப்தி செய்தனர்.
மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் அதிகாரிகள் தாமதப்படுத்தியதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விமான நிலைய விரிவாக்க நில எடுப்பு சிறப்பு வட்டாச்சியர் அலுவலகத்தின் பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றப் பணியாளர்கள் (அமீனா) மற்றும் வழக்கறிஞர்கள் காவல்துறைப் பாதுகாப்புடன் வருகை தந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பெருங்குடியைச் சேர்ந்த ராஜேந்திரன், ஜெகதீசன், கார்த்திகேயன் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களுக்குச் சொந்தமான 17 ஏக்கர் 12 சென்ட் நிலம் 2009 ஆம் ஆண்டு விமான நிலைய விரிவாக்கத்திற்காகக் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்திற்கான இழப்பீட்டுத்தொகை குறைவாக இருந்ததால், கூடுதல் தொகை கோரி அவர்கள் சிறப்பு வட்டாச்சியர் அலுவலகத்தில் முறையிட்டனர்.
சிறப்பு வட்டாச்சியர் அலுவலக அதிகாரிகள், உரிய ஆவணங்கள் இருப்பதால் நீதிமன்றத்தை நாடலாம் என மனுதாரர்களுக்குப் பரிந்துரைத்தனர். அதன்படி, 2022 ஆம் ஆண்டு மதுரை மாவட்ட 3ஆவது கூடுதல் துணை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2022 நவம்பர் மாதம், உரிய இழப்பீட்டுத் தொகையை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயார் - டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இரண்டு ஆண்டுகள் கடந்தும், மனுதாரர்களுக்கு வழங்க வேண்டிய ₹2 கோடியே 92 லட்சம் (வட்டியோடு சேர்த்து ₹3 கோடியே 25 லட்சம்) தொகையை அதிகாரிகள் வழங்காமல் தாமதப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தாமதப்படுத்துவதால், சிறப்பு வட்டாச்சியர் அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்யக் கோரி 2024 ஆம் ஆண்டு மனுதாரர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
நீதிமன்ற உத்தரவின்படி இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நீதிமன்றப் பணியாளர்களும், மனுதாரர் வழக்கறிஞர்களான விஷ்ணுவரதன், கார்த்திகேயன், விக்னேஷ் ஆகியோரும் காவல்துறைப் பாதுகாப்புடன் அலுவலகத்தில் உள்ள சேர்கள், கணினிகள், ஏசி, மின்விசிறிகள் உள்ளிட்ட உபகரணங்களை ஜப்தி செய்யத் தொடங்கினர்.
இதுகுறித்து பேசிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் விஷ்ணுவரதன், "2009 ஆம் ஆண்டு முதல் எங்களது கட்சிக்காரர் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுகிறார். நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகள் இழப்பீட்டுத் தொகையை வழங்கவில்லை. இதனால் தான் ஜப்தி நடவடிக்கைக்காக வந்திருக்கிறோம்," என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தற்போது, சிறப்பு வட்டாச்சியருடன் வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 2030ம் ஆண்டுக்குள் உலகப்போர் நடக்கும்! 5 வருஷம் தான் இருக்கு!! அதிர்ச்சி கொடுக்கும் எலான் மஸ்க்!