×
 

#BREAKING கோவை சிறுமி கொலை வழக்கில் 2 பேர் கைது... பக்கத்திலேயே இருந்த முக்கிய குற்றவாளி சிக்கியது எப்படி?

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த லேத் ஒர்க்ஷாப் தொழிலாளி ஒருவரின் 10 வயது மகள், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள மளிகை கடைக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் மயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், சிறுமி பாதுகாப்பாக இருப்பதாக பெற்றோரிடம் தொடர்ந்து கூறி வந்ததாகத் தெரிகிறது. 

இந்நிலையில், இன்று மாலை சிறுமி மாயமானது குறித்த முதல் தகவல் அறிக்கையை  பெற்றோரிடம் வழங்கி போலீசார் கையொப்பம் பெற்றுள்ளனர். ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதி மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிறுமியின் உடலை மீட்ட போலீசார், உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த மர்ம மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். முதற்கட்டமாக, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மளிகை கடைக்குச் சென்ற சிறுமியை நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது.

இதனிடையே சிறுமியின் மரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் சிக்கியது. சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடம் விசாரணை நடத்திய போது, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற நபர் தான் சிறுமியை பைக்கில் அழைத்துச் சென்றார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் வீட்டிற்கு அருகே வசித்து வரும் கார்த்திக் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உதவியதாக மோகன்ராஜ் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி மாயமானதாக தகவல் பரவியதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோருடன் சேர்ந்து கார்த்திக்கும் சிறுமியை தேடுவது போல் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டது தெரியவந்தது. எனினும், சிறுமியின் மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன, பாலியல் வன்கொடுமை ஏதேனும் நடந்ததா அல்லது முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததா என்பது குறித்து மருத்துவ அறிக்கை மற்றும் முழுமையான விசாரணைக்குப் பிறகே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பட்டப்பகலில் பயங்கரம்...ஓட, ஓட விரட்டி 17 வயது சிறுவன் வெட்டிக்கொலை... குலை நடுங்க வைக்கும் காரணம்...!

 

இதையும் படிங்க: பட்டப்பகலில் பயங்கரம்... மளிகை கடையில் தனியாக இருந்த பெண் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை... மர்ம நபர்களுக்கு வலைவீச்சு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share