சபாஷ்..!! உடைந்தது சாதி பாகுபாடு..!! 21 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை கிராமத்திற்கு கெத்தாக சென்ற அரசு பஸ்..!!
தமிழக அரசின் பொதுப் போக்குவரத்துப் பேருந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தங்கு தடையின்றி இயக்கப்பட்டுச் சமூக நீதியை நிலை நாட்டி உள்ளது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கெம்பனூர் ஊராட்சியில் பல ஆண்டுகளாக நீடித்து வந்ததாகக் கூறப்படும் சாதியப் பாகுபாடு மற்றும் தீண்டாமை தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அண்ணா நகர் பகுதிக்குள் அரசு நகரப் பேருந்து சேவை 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இதனை அப்பகுதி மக்கள் சமூக நீதிக்கான முக்கிய வெற்றியாகக் கொண்டாடி வருகின்றனர்.
கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கெம்பனூர் வரை இயக்கப்படும் அரசு நகரப் பேருந்து எண் 21, அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களின் குடியிருப்புப் பகுதிக்குள் செல்லாமல் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் அன்றாடக் கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பேருந்தைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு கோரி அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வந்தனர். மாநில மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையங்களும் பேருந்து சேவையை நீட்டிக்க பரிந்துரைத்ததாக கூறப்பட்டாலும், நடைமுறை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர். மேலும், உள்ளூர் அரசியல் மற்றும் ஆதிக்க சாதி ஆதிக்கம் காரணமாகவே பேருந்து சேவை மறுக்கப்பட்டதாக சமூக அமைப்புகள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தன.
இதையும் படிங்க: கோவையில் நடந்த வீல்சேர் டி20 கிரிக்கெட்! தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!
இந்நிலையில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை அமைச்சர் வன்னியரசு சமீபத்தில் கோவை மாவட்டத்தில் அரசுத் திட்டங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அண்ணா நகர் மக்கள் தங்களது நீண்டகால கோரிக்கையை நேரடியாக முன்வைத்தனர். அவர்களின் மனுவை பரிசீலித்த அமைச்சர், பொதுச் சேவைகளில் எந்தவித சாதி அடிப்படையிலான பாகுபாடும் இருக்கக் கூடாது என வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்துத் துறையினருக்கு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பலனாக, அரசு பேருந்து எண் 21 தற்போது அண்ணா நகர் பகுதிக்குள் தங்கு தடையின்றி இயக்கப்படத் தொடங்கியுள்ளது. பேருந்து முதன்முறையாக தங்களது குடியிருப்புக்குள் நுழைந்ததை கண்டு மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் மலர் தூவி வரவேற்று, ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு இனிப்புகள் வழங்கி நன்றியைத் தெரிவித்தனர்.
பல ஆண்டுகளாக மறுக்கப்பட்ட அடிப்படை போக்குவரத்து உரிமை மீட்கப்பட்டுள்ள இந்த நிகழ்வு, சமூக சமத்துவம் மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டும் முக்கியமான முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கோவையில் உலக தரத்தில் புதிய ஸ்டேடியம்! விபத்துகள் மற்றும் போதை கலாச்சாரம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி!