×
 

விஜய்க்கு ஆதரவா..? மாறும் அரசியல் களம்..! CPI அவசர செயற்குழு கூட்டம்..!!

தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பது குறித்து நாளை மறுநாள் சிபிஐ அவசர செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மைக்கு ஆதரவு தேடும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியனை தவெக தரப்பில் தொடர்பு கொண்டு பேச்சு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், தவெக தலைவர் விஜய் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது விஜய் சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் பெரும்பான்மைக்கு சற்று குறைவான இடங்களே கிடைத்துள்ளதால், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவற்றிடம் ஆதரவு கோரும் பேச்சுகள் தவெக தரப்பில் தொடங்கியுள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் இது தொடர்பாக பேசியபோது, தவெக தரப்பில் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து கட்சியின் மேலிடம் முடிவு எடுக்கும் என்றும், அவசர செயற்குழு கூட்டத்தின் மூலம் இந்த முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டம் மே 8-ம் தேதி நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: எகிறியது சமையல் எரிவாயு விலை: சிறு வணிகர்களுக்கு நெருக்கடி..!! சிபிஐ கடும் கண்டனம்..!!

தேர்தலுக்கு முன்பு திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது புதிய அரசியல் சூழலில் முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. வீரபாண்டியன், மாற்றத்தை விரும்பிய மக்கள் தவெக மீது பெரும் எதிர்பார்ப்புடன் வாக்களித்துள்ளதாகவும், மக்கள் வழங்கிய தீர்ப்பை கட்சி மதிப்பதாகவும் ஏற்கெனவே கருத்து தெரிவித்திருந்தார். இதேபோல் நாளை மறுநாள் சிபிஎம் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

இருப்பினும், கட்சியின் கொள்கை அடிப்படையில், ஜனநாயக சக்திகளுடன் இணைந்து செயல்படும் வகையில் முடிவு எடுக்கப்படும் என்பது அவரது நிலைப்பாடு. தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ள இந்தச் சூழலில், மே 8-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த முடிவு தவெகவின் ஆட்சி அமைப்பு முயற்சிக்கு வலுச் சேர்க்குமா அல்லது புதிய கூட்டணி சமன்பாடுகளை உருவாக்குமா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 5 மாநில தேர்தல் முடிந்த கையோடு பாஜக செய்யப்போகும் ஷாக்கிங் சம்பவம்... உஷார்படுத்திய கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய தலைவர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share