திருமாவின் பேச்சு சரியல்ல… சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் எதிர்ப்பு
தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பான திருமாவளவனின் கருத்து சரியானது அல்ல என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது சமூக நீதிக்கு முரணானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவரது முக்கிய கருத்து, தூய்மைப் பணியை நிரந்தரப்படுத்துவது, இந்தத் தொழிலை தொடர்ந்து செய்ய வேண்டிய கட்டாயத்தை தூய்மை பணியாளர்கள் மீது திணிப்பதாகவும், இது சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்துவதாகவும் இருக்கும் என்று அவர் கூறினார்.
குப்பை அள்ளும் தொழிலை நிரந்தரப்படுத்தி, காலம் முழுவதும் நீங்கள் அதையே செய்ய வேண்டும் என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. அவர்களை அந்தத் தொழிலில் இருந்து மீட்பதே உண்மையான சமூக நீதி என்று அவர் வலியுறுத்தினார். இந்த நிலையில் திருமாவளவனின் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் எதிர்ப்பு தெரிவித்தார்.
தூய்மை பணியாளர்களின் பணி நிரந்தரம் என்பது சட்டபூர்வமான கோரிக்கை என்றும் அதைதான் தூய்மை பணியாளர்கள் கேட்டதாகவும் தெரிவித்தார். திருமாவளவனின் கருத்து ஏற்கத்தக்கது அல்ல என்று கூறிய சண்முகம், தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் கூடாது என திருமாவளவன் பேசியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்கள் நலன் காக்கும் தியாகம் உள்ளமே! திருமாவுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து...
அரசு துறைகளில் 240 நாட்கள் வேலை செய்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது சட்டம் என்று தெரிவித்த சண்முகம், சட்டபூர்வமான கோரிக்கையை தான் தூய்மை பணியாளர்கள் கேட்பதாக தெரிவித்தார். தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் தான் கேட்கிறார்களே தவிர பரம்பரை பரம்பரையாக வேலை தாருங்கள் என்று கேட்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருமாவின் அரசியல் வாழ்வு எப்படிப்பட்டது தெரியுமா? கமல்ஹாசன் நெகிழ்ச்சி