×
 

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு பக்கா ப்ளான்..!! ஆர்.பி உதயகுமாரை வம்பிழுத்த சிடிஆர்..!!

எடப்பாடிக்கு அடுத்தபடியாக பொதுச் செயலாளர் ஆவதற்கான பணிகளை அவர் செய்து வருகிறார்.

மதுரை உலகப்புகழ் பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்யும் வகையில், அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.  

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சென்ற வாரம் நடத்தப்பட்ட ஆய்வுக்கு அடுத்து இன்று மேலும் ஒரு ஆய்வு நடைபெற்றதாகவும், பக்தர்கள் வருகையின் போது அனைத்து வசதிகளையும் உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். நாளை வீர வசுந்தராயர் மண்டபம் திறக்கப்பட உள்ளது என்றும், சட்ட விதிகளுக்கு உட்பட்டே பத்திரிகைகள் அடிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.  

அறநிலையத்துறையில் அரசியல் தலையீடு இருக்காது என அழுத்தம் கொடுத்த அமைச்சர், “உண்மையான பக்தர்கள் மற்றும் கோயிலுக்கு சிறப்பாக பணியாற்றுபவர்களே அறங்காவலர் குழுவில் இடம்பெறுவார்கள். திமுக நிர்வாகிகள் அல்லது கட்சி சார்ந்தவர்களுக்கு இங்கு வேலை கிடையாது. இந்தக் கோயிலை யாரும் கட்டவில்லை; எந்தத் தனிநபருக்கும் சொந்தமல்ல. மீனாட்சி அம்மன் கோயிலில் அரசியல் தலையிட வேண்டாம்” என்று தெளிவுபடுத்தினார்.  

இதையும் படிங்க: திமுக - அதிமுக இடையே ஒற்றுமையை ஏற்படுத்தியவர் விஜய்..! அமைச்சர் ராஜ்குமார் பேச்சு..!

அதே சமயம், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் மீது கடும் விமர்சனம் வைத்தார். “அதிமுகவை அழிவின் பாதைக்கு கொண்டு சென்றதில் 100 சதவீதப் பங்கு ஆர்பி உதயகுமாருக்கு உண்டு. எடப்பாடிக்கு அடுத்தபடியாக பொதுச் செயலாளர் ஆவதற்கான பணிகளை அவர் செய்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் தேவையில்லை, சின்னம்மாவை முதல்வராக்குங்கள் என்று முதலில் சொன்னதும் அவர்தான். இன்னும் ஆறு மாதத்தில் ‘எடப்பாடி தேவையில்லை, நானே போதும்’ என்று சொல்லிவிடுவார். 

ஒவ்வொரு நாளும் வீடியோ வெளியிட்டு தமிழக வெற்றிக் கழக அரசை விமர்சித்துத் தனது இருப்பைக் காட்டிக் கொள்கிறார்” என்றார்.  முதல்வர் விஜய் பாரதப் பிரதமருக்கான போட்டியில் மூன்றாவது இடத்தில் இருப்பதாக வெளியான கருத்துக்கணிப்பு குறித்து கேட்கப்பட்டபோது, “தலைவர் அந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பாரோ அதைத்தான் கூற முடியும்” என பதிலளித்தார்.  

மேலும், ஜல்லிக்கட்டு மைதானங்கள் குறித்துப் பேசிய அவர், அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் திமுக ஆட்சியில் கலைஞரின் பெயரை நிலைநாட்டும் வகையில் கட்டப்பட்டவை என்றும், பாரம்பரிய ஜல்லிக்கட்டு அந்தந்த வாடிவாசல்களில் நடைபெறுவதே உண்மை என்றும் சுட்டிக்காட்டினார். குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் உறுதி அளித்தார்.
 

இதையும் படிங்க: ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! பேரவையில் வன்னியரசு முக்கிய அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share