"சி.வி.சண்முகம் வழக்கில் பிப். 12-ல் தீர்ப்பு!" மகளிர் ஆணைய உத்தரவை எதிர்த்த மனு ஒத்திவைப்பு!
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படும் புகாரில், சி.வி. சண்முகம் மீதான மாநில மகளிர் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி, குற்ற நடவடிக்கை எடுக்கும்படி, மாநில மகளிர் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம், பிப்ரவரி 12 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம், சில மாதங்களுக்கு முன் விழுப்புரத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி, சென்னையைச் சேர்ந்த பிரமிளா மற்றும் ராதிகா ஆகியோர் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்த புகாரை விசாரித்த ஆணையம், சி.வி.சண்முகத்துக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி, டி.ஜி.பி.க்கு, நவம்பர் 11 ம் தேதி பரிந்துரைத்திருந்தது.
இதையும் படிங்க: புராதன கோவில்களில் இனி ஒரு செங்கல் கூட வைக்க முடியாது! ஆணையம் அமைக்க தாமதம் செய்த அரசுக்கு உயர் நீதிமன்றம் தடை!
இதை எதிர்த்து, சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.வி.சண்முகம் தரப்பில், விசாரணைக்கு ஆஜராகக் கூறி மகளிர் ஆணையம் அனுப்பிய சம்மனில் புகார் குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை. ஆணையத்தின் பிற ஊப்பினர்க்ளுடன் கலந்தாலோசிக்காமல், குற்ற நடவடிக்கை எடுக்க கூறி, ஆணைய தலைவர் டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதனால் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காவல் துறை தரப்பில், மகளிர் ஆணையம் அனுப்பிய சம்மனில் புகார் விவரங்களை தெரிவிக்க அவசியமில்லை. ஆணையம் தற்போது பரிந்துரை மட்டுமே அனுப்பியுள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுப்பதா? வேண்டாமா? என இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என, தெரிவிக்கப்பட்டது.
மகளிர் ஆணையம் தரப்பில், ஆணைய தலைவர் மற்றும் இரு உறுப்பினர்கள் அமர்வு தான், குற்ற நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து. கையெழுத்திடும் அதிகாரி என்ற முறையில் ஆணைய தலைவர், டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தன்னிச்சையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, பிப்ரவரி 12 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: நாங்கள் தலையிட விரும்பவில்லை! சென்னை உயர்நீதிமன்றமே முடிவெடுக்கும்! ஜனநாயகன் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!