×
 

பிடித்த சனி விட்டுவிட்டது.. அதிமுகவுக்கு இன்றுதான் தீபாவளி! ஓபிஎஸ்-ஐ கடுமையாக சாடிய சி.வி. சண்முகம்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், ஓ. பன்னீர்செல்வம் (OPS) மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக வழக்கறிஞர் பிரிவினருக்காக, வேட்பாளர்களின் தகுதி மற்றும் தேர்தல் நடைமுறைகள் அடங்கிய தேர்தல் முகவர் கையேடு 2026" வெளியிடப்பட்டது. இந்த நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி. சண்முகம், திமுக-வில் இணைந்த ஓ. பன்னீர்செல்வத்தை (ஓபிஎஸ்) மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார்.

அதிமுக-வைப் பிளவுபடுத்தி, உள்ளிருந்தே கொல்லும் வியாதியாகச் செயல்பட்ட ஓபிஎஸ் எனும் 'பிடித்த சனி' இன்று நீங்கிவிட்டது. அதிமுக-வினருக்கு இன்றுதான் உண்மையான பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை. துரோகம் ஒருபோதும் வென்றதாகச் சரித்திரம் இல்லை" என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக-வை அழிக்க எதிரிகளால் சாதிக்க முடியாததை, ஓபிஎஸ் எனும் துரோகி மூலம் சாதிக்க முயன்றனர். "ஓபிஎஸ் திமுக-வின் 'பி டீம்' மற்றும் பினாமி என்று நாங்கள் அன்றே சொன்னது இன்று அவர் திமுக-வில் இணைந்ததன் மூலம் 100% நிரூபணமாகிவிட்டது" என அவர் குற்றம் சாட்டினார்.

ஓபிஎஸ்-க்குத் தேவைப்பட்டால் நண்பர்கள், இல்லையெனில் துரோகிகள் எனச் சூழ்நிலைக்கு ஏற்பப் பச்சோந்தி போல் நிறம் மாறுபவர். அதிமுக வழங்கிய முதலமைச்சர், ஒருங்கிணைப்பாளர் என அனைத்துப் பதவிகளையும் அனுபவித்துவிட்டு, அதே அலுவலகத்தைத் தனது காலால் எட்டி உதைத்துக் களங்கப்படுத்தியவர் அவர் எனச் சீறினார். தேர்தல் தோல்வி குறித்தப் பதிவு: ஓபிஎஸ் துணை முதல்வராக இருந்தபோதே, அவரது சொந்த மாவட்டமான தேனியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியதைச் சுட்டிக்காட்டிய சி.வி. சண்முகம், அவரால் கட்சிக்கு எந்தப் பலனும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.

இதையும் படிங்க: எங்கும் தமிழ் என்பது வெறும் பேச்சா? எஸ்.ஐ. தேர்வு குளறுபடி குறித்து எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

ஓபிஎஸ் போன்றத் துரோகிகளால் கட்சி பிளவுபட்டாலும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இன்று எஃகு கோட்டையாக வீரநடை போட்டு வருவதாகவும், வரவிருக்கும் தேர்தலைச் சட்டப்படிச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதிபடக் கூறினார்.

ஆமையை வீட்டிற்குள் விட்டால் நாசமாகிவிடும் என்று ஓபிஎஸ்-ஐ ஆமையுடன் ஒப்பிட்டுப் பேசிய சி.வி. சண்முகத்தின் இந்த அதிரடிப் பேச்சு, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக-வை விட்டு சென்றவர்கள் மீண்டும் வரத் தயார்! மாற்று கட்சியினருக்கு எஸ்.பி. வேலுமணி அழைப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share