உஷார் மக்களே..! தமிழகத்தில் டெங்கு காய்ச்சல்... அமைச்சர் அருண்ராஜ் அலர்ட்..!
டெங்கு காய்ச்சல் தொடர்பாக அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது சுவாச தொற்று நோய்களும் டெங்கு காய்ச்சலும் அதிக அளவில் பரவி வருவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். இதுவரை மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் பதினைந்தாயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்து மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவாக இருந்தாலும், மழைக்காலம் தொடங்கியுள்ளதால் தொற்றுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்த காலகட்டத்தில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக காணப்படுவதாகவும், குறிப்பாக சுவாச தொற்றுகள் மற்றும் ஃப்ளூ போன்ற நோய்கள் பரவக்கூடிய சூழல் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசு தனது தரப்பில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் பொதுமக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல் அல்லது சளி இருந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்து கவனிக்க வேண்டும். இது தொற்று பரவுவதை தடுக்க உதவும். பொது இடங்களுக்கு செல்லும்போது முடிந்தவரை முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது என்றும் அறிவுறுத்தினார்.டெங்கு காய்ச்சல் ஏடிஸ் வகை கொசுக்களால் பரவுகிறது. இந்த கொசுக்கள் சுத்தமான தேங்கிய தண்ணீரில் முட்டையிட்டு பெருகுகின்றன.
இதையும் படிங்க: 50+ பேருக்கு என்ன ஆச்சு?... திருவள்ளூரில் திடுதிப்பென பரவும் மர்ம காய்ச்சல்... திணறும் அரசு மருத்துவமனை...!
வீட்டைச் சுற்றியுள்ள குழிகள், டயர்கள், பிளாஸ்டிக் பாத்திரங்கள், மலர் தொட்டிகள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறையாவது வீட்டைச் சுற்றி ஆய்வு செய்து தேங்கிய நீரை அகற்ற வேண்டும். கொசுக்கடி தவிர்க்க முழு உடலை மறைக்கும் ஆடைகளை அணியலாம். தேவைப்பட்டால் கொசுவலை பயன்படுத்தலாம்.காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும். தீவிர காய்ச்சல், தலைவலி, கண்வலி, உடல் வலி, வாந்தி போன்றவை இருந்தால் தாமதிக்காமல் சிகிச்சை பெற வேண்டும். அரசு மருத்துவமனைகளில் டெங்கு சிகிச்சைக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் எகிறும் இன்ஃபுளுயென்சா பாதிப்பு! முகக்கவசம் அணிய பொது சுகாதாரத்துறை அவசர அறிவுறுத்தல்!