சென்னையில் எகிறும் இன்ஃபுளுயென்சா பாதிப்பு! முகக்கவசம் அணிய பொது சுகாதாரத்துறை அவசர அறிவுறுத்தல்!
தமிழகத்தில் இன்ஃபுளுயென்சா H1 காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், முகக்கவசம் அணிந்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே டெங்கு மற்றும் பருவகாலக் காய்ச்சல்களின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், பன்றிக்காய்ச்சல் எனப்படும் 'இன்ஃபுளுயென்சா' (H1 வகை) வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதாகவும், பெருநகரங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் சென்னை 4-வது இடத்தில் உள்ளதாகவும் மருத்துவ ஆய்வுகள் மற்றும் பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பரவலாகப் பெய்து வரும் கோடை மற்றும் வளிமண்டல மழையின் காரணமாகச் சளி, இருமல் மற்றும் உடல் சோர்வுடன் கூடிய காய்ச்சல் பாதிப்பு பொதுமக்களிடையே கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இது தொடர்பாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர் ஜெயபிரகாஷ் விளக்குகையில், வரலாற்று ரீதியாக 1919-ல் பெரும் பேரழிவை ஏற்படுத்திய இன்ஃபுளுயென்சா வைரஸும், 2019-ல் உருவான கோவிட் பெருந்தொற்றும் பருவகால மாற்றங்களின் போது மரபணு உருமாற்றம் அடையும் தன்மை கொண்டவை.
நடப்பாண்டில் பரவி வரும் H1 வைரஸின் வீரியம் குறைவாக இருந்தாலும், சாதாரண சளி மற்றும் தொண்டை வலி என மெத்தனமாக இருக்கக் கூடாது. இணைநோய் உள்ளவர்களுக்கு இது நிமோனியா மற்றும் மாரடைப்பு போன்ற தீவிரப் பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால் உரிய முன்னெச்சரிக்கையும் மருத்துவ ஆலோசனையும் அவசியம் எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: 27 ஆண்டுகளாக தொடரும் பாதயாத்திரை! வேளாங்கண்ணி நோக்கி பக்தர்களுடன் அமைச்சர் மரிய வில்சன்!
பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் மற்றும் தொற்றுநோய் நிபுணர் சுப்பிரமணியன் ஆகியோர் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்து பேசுகையில், தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவரை 12,500 பேருக்கு டெங்கு காய்ச்சலும், 4,200 பேருக்கு உண்ணிக் காய்ச்சலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக H1 இன்ஃபுளுயென்சா பாதிப்பு கடந்த ஜனவரி மாதத்தில் வெறும் 19 ஆக இருந்த நிலையில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மட்டும் 339 ஆக கிடுகிடுவென உயர்ந்துள்ளது. எனினும் முறையான சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தனர்.
காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரக் காய்ச்சல் கண்காணிப்பு வார்டுகள், தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் போதுமான அளவு உயிர்காக்கும் மருந்துப் பொருட்களை முழுமையாகக் கையிருப்பில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மற்றும் கைகளைத் தூய்மையாக வைத்துக்கொள்வது போன்ற சுயபாதுகாப்பு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: என்னுயிர் அப்பா பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்... முதல்வர் விஜய்க்கு சீமான் நெஞ்சம் நிறைந்த நன்றி!