×
 

எழும்பூர் ஆவண காப்பகத்தில் புதிய வசதிகள்...! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Tamil Nadu Archives and Historical Research) வளாகத்தில் புனரமைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தமிழகத்தின் வரலாற்றுச் சுவடுகளை அடுத்த தலைமுறைக்கும் சிதையாமல் கொண்டு செல்லும் நோக்கில், உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு புதிய திட்டங்களைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூரில் உள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் நவீனத் தொழில்நுட்பப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தின் பிரதான கட்டிடம், சுமார் ₹10 கோடி மதிப்பீட்டில் அதன் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டுள்ளது. இதனைத் துணை முதலமைச்சர் இன்று திறந்து வைத்துப் பார்வையிட்டார். ஆவணக் காப்பகத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களைப் பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், ₹15 லட்சம் செலவில் பிரத்யேக கண்காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் சாம்பியன்ஸ்.... 178 விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணி ஆணை முதலமைச்சர் பாராட்டு!

100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த சுமார் 10 லட்சம் அரிய ஆவணங்களை, நவீன ஜப்பானியத் திசுத் தாள் (Japanese Tissue) முறையில் செப்பனிட்டுப் பாதுகாக்கும் பணிகளை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்திற்காக ₹10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டங்கள் வெல்லட்டும் எனத் துணை முதலமைச்சர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் தொன்மையை அறிவியல்பூர்வமாகப் பாதுகாப்பதில் இந்த ஆவணக் காப்பகம் ஆசியாவிலேயே மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தப் புனரமைப்பு மற்றும் நவீனப் பாதுகாப்புப் பணிகள், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: "தமிழக அரசின் விருது தாயின் முத்தத்திற்குச் சமம்!! கலைஞர்களை வாழ்த்திய துணை முதல்வர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share