#திராவிடமாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்..!! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சூளுரை..!!
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட ஒரு முக்கியமான பதிவில், திமுக இளைஞர் அணியின் விரிவான தேர்தல் தயாரிப்புகள் குறித்து அறிவித்துள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது: தி.மு.கழகத்தின் முதன்மை அணியான இளைஞர் அணியை மாநிலம் முழுவதும் வலுப்படுத்தும் வகையில், ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைகள், நகரங்கள், பகுதிகள், பேரூராட்சிகள் மற்றும் அனைத்து வார்டுகளிலும் மொத்தம் 5 லட்சம் நிர்வாகிகளை நியமித்து, மிகப் பெரிய அளவிலான கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம் என்று தெரிவித்தார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின் பேரில், தலைமைக் கழகத்தின் ஒப்புதலுடன், இந்த 5 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகளை முன்னிலைப்படுத்தி '#களத்தில்_இளைஞர்_அணி' என்ற பெயரில் மாபெரும் தேர்தல் பிரச்சார இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: துரைமுருகனை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி..!! இனி அமைச்சர் பதவி கிடையாதா? திமுகவில் நடப்பது என்ன..??
ஒவ்வொரு பாகத்திற்கும் உட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுடன் சேர்த்து, அந்த பகுதியில் தி.மு.கழகத்தின் மீது தீவிர ஆர்வமும் பற்றும் கொண்ட மேலும் 10 இளைஞர்களை இணைத்து, பாக வாரியாக குழுக்களை அமைத்துள்ளனர். இந்தக் குழுக்கள், இளம் வாக்காளர்களை நேரடியாகச் சந்தித்து, கழகத் தலைவர் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியை மேற்கொள்ளும்.
https://x.com/Udhaystalin/status/2037759381350367273/photo/1
தேர்தல் நாளான ஏப்ரல் 23, 2026-க்குள், இந்த இளைஞர் குழுக்கள் ஒவ்வொரு வாக்காளரையும் குறைந்தபட்சம் இரண்டு முறை நேரில் சந்தித்து, தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், அமைதியான தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு எவ்வித இடமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மாநிலத்தின் உரிமைகளை டெல்லிக்கு அடகு வைக்க முயலும் அடிமை மனப்பான்மை கொண்ட சக்திகளின் உண்மையான எண்ணத்தை மக்களிடம் தெளிவாக எடுத்துரைக்கவும், தி.மு.க. அரசின் கடந்த ஐந்தாண்டு கால சாதனைகளை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்லவும் இந்த இயக்கம் செயல்படும் என்றார்.
இறுதியாக, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் '#திராவிடமாடல் 2.0' என்ற புதிய ஆட்சியை உருவாக்கும் இலக்குடன், இளைஞர் அணி அயராது உழைக்கும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சிலிண்டர் தட்டுப்பாட்டில் மத்திய அரசு தலையிட வேண்டும்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!