×
 

பாலியல் குற்றங்கள் குறைஞ்சிருக்கு... எதிர்க் கட்சிகள் விமர்சனம் vs தமிழக அரசு..!!

கடந்த 5 வருடங்களில் பாலியல் உள்ளிட்ட குற்றங்கள் குறைந்திருப்பதாக உள்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாலியல் உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், போக்சோ வழக்குகள், குடும்ப வன்முறை போன்றவை கணிசமாக உயர்ந்துள்ளதாக அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் அதற்கு மாறான தரவுகள் வெளியானது. தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உள்துறைச் செயலாளர் தீரஜ் குமார் அண்மையில் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, உள்துறைச் செயலாளர் தீரஜ் குமார், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோர் இணைந்து தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து விரிவான விளக்கம் அளித்தனர்.

உள்துறைச் செயலாளர் தீரஜ் குமார் கூறியபடி, தமிழகத்தில் சமீப காலமாக சில ஊடகங்களிலும் எதிர்க்கட்சிகளாலும் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகவும், குற்றங்கள் அதிகரித்துவிட்டதாகவும் தவறான பிம்பம் உருவாக்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார். இதற்கு மாறாக, உண்மைப் புள்ளிவிவரங்கள் கடந்த ஐந்தாண்டுகளில் பெரும்பாலான குற்ற வகைகளில் குறிப்பிடத்தக்க குறைவைத் தெரிவிப்பதாக அவர் வலியுறுத்தினார்.

குறிப்பாக பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட அவர், 2021-ஆம் ஆண்டில் 422 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 2025-ஆம் ஆண்டில் அது 401 ஆகக் குறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். இது சுமார் 5% க்கும் மேலான குறைவைக் காட்டுகிறது. இதேபோல், கொலை வழக்குகளிலும் குறைவு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 2021-இல் 1,597 கொலை வழக்குகள் பதிவாகியிருந்த போது, 2025-இல் அது 1,461 ஆகக் குறைந்துள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தொடரும் பாலியல் குற்றங்கள்.. தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக இன்பதுரை புகார்..!!

கொள்ளை உள்ளிட்ட பிற கடுமையான குற்றங்களிலும் இதே போன்ற கீழ்நோக்கிய போக்கு இருப்பதாகத் தெரிவித்தார். பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைவான விசாரணை மற்றும் தீர்ப்பு வழங்குவதற்கு சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதனால் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.மேலும், பொதுநிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள் போன்ற பெருந்திரளான கூட்டங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு காவல்துறை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும், இதனால் ஒட்டுமொத்த சட்டம்-ஒழுங்கு சூழல் மேம்பட்டுள்ளதாகவும் தீரஜ் குமார் விளக்கினார். காவல் நிலைய மரணங்கள் குறித்து பேசிய அவர், அவற்றை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாதவை என்றும், அத்தகைய சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விவசாய நண்பன் போல் கபட நாடகம்... பிரதமரை வறுத்தெடுத்த அமைச்சர் ரகுபதி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share