×
 

பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

பதவிக்காகத் தவெக கூட்டணியில் சேரவில்லை என்றும் கூட்டணிக் கட்சிகளைத் தக்கவைக்கத் திமுக தவறிவிட்டது என்றும் தருமபுரியில் தொல்.திருமாவளவன் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் பதவி மற்றும் அதிகார பவுசுகளுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல என்றும், மக்களைப் பாதுகாக்கவும் இடதுசாரி-பெரியாரியக் கருத்துகளைக் கொண்டு சேர்க்கவுமே உருவானது என்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். தருமபுரியில் விசிக தலைமை நிலையச் செயலாளர் தகடூர் மா.தமிழ்ச்செல்வன் மகள் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்துப் பேசிய அவர், தவெக அரசுடனான கூட்டணி நிலைப்பாடு, விசிகவின் கடந்த காலத் தேர்தல் அரசியல் வரலாறு மற்றும் திமுக தலைமையின் செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பேசினார். பலியிடும் இடத்தில் கதவை திறந்து வைத்தால் ஆடு வெளியேறித்தான் செல்லும் எனக் குறிப்பிட்ட அவர், திமுக கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துத் தக்கவைக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

விசிக தேர்தல் அரசியலை முன்னெடுத்த வரலாற்றுப் பின்னணியை நினைவுகூர்ந்த திருமாவளவன், கலைஞர் ஆட்சிக் காலத்தில் பாமகவின் அழுத்தத்தால் விசிக தோழர்கள் மீது பொய் வழக்குகளும் குண்டர் சட்டமும் போடப்பட்டபோதுதான், தேர்தல் களத்தில் இறங்க முடிவெடுத்தோம். அரசு ஊழியராக இருந்த என்னை ஜி.கே.மூப்பனார் கட்டாயப்படுத்தித் தேர்தலில் நிற்க வைத்தார். என் பிறந்தநாளன்றே அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு, 1999-ல் சிதம்பரத்தில் 3-வது அணியாகப் போட்டியிட்டு 2.25 லட்சம் வாக்குகள் பெற்றேன். பதவி ஆசை இருந்திருந்தால் அதிமுக, திமுகவுடன் இணைந்தே எளிதாக வெற்றி பெற்றிருக்க முடியும்; ஆனால் கொள்கைக்காகவே தனித்துப் போட்டியிட்டோம் என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா ஆட்சியில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, சாதி-மத அடையாளங்களை மாற்றும் நோக்கில் தூய தமிழ்ப் பெயர்களைச் சூட்டும் இயக்கத்தை விசிகவே முதலில் முன்னெடுத்ததாக அவர் கூறினார். வன்னிக்காட்டின் நினைவாகவே தம்பி ஜெயராஜுக்கு 'வன்னியரசு' எனப் பெயர் சூட்டியதை நினைவு கூர்ந்தார். மேலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்குத் தமிழகத்தில் மிகவும் பிடித்த இயக்கம் விசிகதான் என்றும், 'தம்பி சிறுத்தைகள் படை' என்று பெயரிட்டதுடன் தன்னைத் தழுவிக்கொண்டு களமாட வாழ்த்தியதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: கூட்டணிக்கு என்ன பெயர்..? பரபரப்பை கிளப்பிய செப்.9..!! மாணிக்கம் தாகூர் தகவல்..!!

திமுக கூட்டணியைக் காப்பாற்றவே 2024 வரையிலும் கடுமையாகப் போராடினேன். ஆனால் தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளை திமுக தலைமை நடத்திய விதம் நல்லிணக்கமாக இல்லை. விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பே கொள்கை உறுதியோடு இருந்த என்னை, பதவி ஆசையில் தவெக பக்கம் சென்றதாக விமர்சிப்பது அற்பத்தனம். விஜய் நேரில் அழைத்து அமைச்சர் பதவி தருவதாகக் கூறியபோதும் மறுத்துவிட்டு, 30 ஆண்டுகளாக இயக்கத்திற்காக உழைத்த தம்பி வன்னியரசுவுக்கு அந்த வாய்ப்பை வழங்கினேன். பாஜகவின் மதவாத அரசியலை வீழ்த்தவே தவெக கூட்டணியில் 'மதச்சார்பற்ற' என்ற சொல் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி அதனை ஏற்க வைத்தேன் என்று திருமாவளவன் விளக்கமளித்தார்.

இதையும் படிங்க: கூட்டணி முறிவுக்கு 100% திமுக தான் காரணம்... விஜயை குறைத்து மதிப்பீட்டீங்க..! திருமா. தாக்கு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share