திவ்யா சத்யராஜுக்கு சென்னை மேயர் பதவி? தொண்டாமுத்தூர் சீட்டை ஏற்காதது ஏன்?
தொண்டாமுத்தூரில் எஸ்.பி. வேலுமணியை எதிர்த்து போட்டியிட வேட்பாளர் சீட் வழங்கப்பட்டது. அவரது தாயார் உடல்நல காரணங்களால் அந்த சீட்டை ஏற்காமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சத்யராஜின் மகளும், சமூக ஆர்வலருமான திவ்யா சத்யராஜ் அவர்களுக்கு வரவிருக்கும் தேர்தலில் சென்னை மேயர் பதவி உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை எதிர்த்துப் போட்டியிடத் திவ்யா சத்யராஜுக்கு திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் (MLA) வேட்பாளர் சீட் வழங்கப்பட்டது.
திவ்யா சத்யராஜின் தாயார் மகேஸ்வரி சத்யராஜ் அவர்களின் உடல்நலக் குறைவு காரணமாக, தற்போது அவரால் தீவிரத் தேர்தல் களப்பணியில் ஈடுபட முடியாத சூழல் நிலவுகிறது. இதனால், தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை அவர் மென்மையாக மறுத்துள்ளதாகத் தெரிகிறது.
திவ்யா சத்யராஜ் போட்டியிட மறுத்ததைத் தொடர்ந்து, தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளராக என்.ஆர். கார்த்திகேயன் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒருவழியாக கிடைத்த அனுமதி! மார்ச் 30-ல் பெரம்பூரில் விஜய் பிரசாரம்!
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், திவ்யா சத்யராஜின் சமூகப் பணிகள் மற்றும் மக்கள் செல்வாக்கைக் கருதி, அவருக்குச் சென்னை மேயர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் வலுவாகப் பேசப்படுகிறது.
சமூக வலைதளங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் மூலம் இளைஞர்களிடையே திவ்யா சத்யராஜ் நற்பெயரைப் பெற்றுள்ளார். கோவைக்குப் பதிலாகச் சென்னையில் அவருக்குப் பொறுப்பு வழங்கப்படுவதன் மூலம், தலைநகரின் மேயர் பதவிக்கு ஒரு புதிய மற்றும் படித்த முகத்தைத் தலைமை முன்னிறுத்த விரும்புவதாகக் கருதப்படுகிறது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் நாளை கூட்டணி கட்சித் தலைவர்களுக்குத் தேநீர் விருந்து அளிக்கவுள்ள நிலையில், வேட்பாளர் மாற்றங்கள் குறித்த இத்தகைய நகர்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஏற்கனவே திமுக வேட்பாளர் பட்டியலில் 60-க்கும் மேற்பட்ட புதிய முகங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், திவ்யா சத்யராஜின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாளை 'தளபதி' அதிரடி! 234 தொகுதிகளுக்கும் தவெக வேட்பாளர்களை அறிவிக்கிறார் விஜய்!