×
 

நெருங்கும் ராஜ்யசபா தேர்தல்... வேட்பாளர்களை அறிவிக்காத திமுக, அதிமுக..! பெரும் எதிர்பார்ப்பு..!!

ராஜ்ய சபா தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் மாநிலங்களவைக்கான இரு ஆண்டுக்காலத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்யும் கால அவகாசம் நாளை மறுநாள் நிறைவடைய உள்ளது. ஆனால், ஆளும் திமுகவும் எதிர்க்கட்சியான அதிமுகவும் இதுவரை தங்கள் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காதது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், 6 மாநிலங்களவை இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி 4 இடங்களையும், அதிமுக தலைமையிலான கூட்டணி 2 இடங்களையும் எளிதாகப் பெறும் நிலை உள்ளது.

வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 26-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை எந்தக் கட்சியும் வேட்பாளர்களை உறுதிப்படுத்தி அறிவிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணமாக கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள இழுபறியே கருதப்படுகிறது. திமுகவைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் திமுக 25 தொகுதிகளை மட்டுமே வழங்க முன்வந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கோரி வருவதால் பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.

இதனால், ஒரு மாநிலங்களவை இடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்குவது குறித்தும் முடிவாகவில்லை. திமுக தலைமை இன்று இரவுக்குள் காங்கிரஸ் முடிவெடுக்காவிட்டால், சொந்த வேட்பாளர்களை அறிவித்து, ஒரு இடத்தை புதிய கூட்டணி கட்சியான தேமுதிகவுக்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள இடங்களில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எம்.எம். அப்துல்லா போன்றோர் பரிசீலிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் இன்று முடிவெடுத்தால் மட்டுமே அவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் திமுக தனித்து முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதிமுக பக்கம் பார்க்கும்போது, கூட்டணி கட்சிகளான பாமக உள்ளிட்டவற்றுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: ஸ்டாலின் நடிக்கிறாரா? எலக்ஷன்ல இருக்கு..! திமுக கவுன்சிலர் செயலுக்கு TTV எதிர்ப்பு..!!

2 இடங்களில் ஒன்றை பாமகவுக்கு ஒதுக்கவும், மற்றொன்றில் முன்னாள் துணை சபாநாயகர் மு. தம்பிதுரையை மீண்டும் நிறுத்தவும் அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. கூட்டணி உறுதிப்படுத்தப்படாத நிலையில் வேட்பாளர்களை அறிவிப்பது சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் நெருங்கி வருவதால் இரு கட்சிகளும் அடுத்த சில மணி நேரங்களில் வேட்பாளர்களை அறிவிக்க வாய்ப்புள்ளது. 

இதையும் படிங்க: அரசியலில் பரபரப்பு..! திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவு.. கார்கேவுக்கே முழு அதிகாரம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share