யார் இந்த பரந்தாமன்? சுகன்யா? அதிமுக, தவெகவை எதிர்கொள்ள திமுகவின் அதிரடி தேர்வு! கசிந்தது இடைத்தேர்தல் ப்ளான்!
தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளில் திமுகவின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் முக்கிய குரல்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.
அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. மதுராந்தகத்தில் வழக்கறிஞரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஐ. பரந்தாமனையும், தாராபுரத்தில் கட்சியின் அடிமட்டத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் எஸ். சுகன்யாவையும் திமுக களமிறக்கியுள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் ஐ. பரந்தாமன், திமுக தலைமைக் கழக சட்டத்துறையின் இணைச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் பி.ஏ., பி.எல். சட்டப்படிப்பை முடித்த இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். .
பரந்தாமனுக்கு தேர்தல் அரசியலிலும் அனுபவம் உள்ளது. 2016ஆம் ஆண்டு பூந்தமல்லி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அவர் 92 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டு சென்னை எழும்பூர் (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். இந்த அனுபவத்தை கருத்தில் கொண்டு மதுராந்தகத்தில் அவரை திமுக நிறுத்தியுள்ளதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வெற்றிக் கனியை தலைவருக்கு சமர்ப்பணம்... 2 தொகுதியிலும் திமுக தான்..! வேட்பாளர் பரந்தாமன் உறுதி..!!
மறுபுறம் தாராபுரம் தொகுதியில் எஸ். சுகன்யாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட திமுகவில் அடித்தட்டு அளவில் தொடர்ந்து செயல்பட்டு வரும் இவர், மகளிர் அணி மற்றும் உள்ளூர் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. தொகுதி மக்களின் உள்ளூர் பிரச்னைகளில் நேரடியாக கவனம் செலுத்தி வந்ததும் அவரது பலமாக பார்க்கப்படுகிறது.
இதனால் மதுராந்தகத்தில் அனுபவம் வாய்ந்த சட்ட நிபுணரையும், தாராபுரத்தில் உள்ளூர் செல்வாக்கு கொண்ட பெண் முகத்தையும் நிறுத்தி திமுக தேர்தல் கணக்கை வகுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சூடுபிடித்த இடைத்தேர்தல் களம்.. யார் இந்த பரந்தாமன், சுகன்யா? வேட்பாளர்களின் முழு பின்னணி இதோ!!