15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்! உதயநிதி, கனிமொழி, சபரீசன் கையில் முக்கிய தேர்வு! மு.க.ஸ்டாலின் கொடுத்த டாஸ்க்!
இந்தப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக, ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு 76 பிரதிநிதிகளும் பங்கேற்கும் வீடியோ கான்பரன்ஸ் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தி.மு.க.வில் மேற்கொள்ளப்பட உள்ள அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு பணிகளுக்காக, 38 வருவாய் மாவட்டங்களுக்கு தலா இருவர் வீதம் 76 தலைமைக்கழக பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்களை கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையிலான நால்வர் அணி தேர்வு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அறிவாலயத்தில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி நடைபெற்ற தி.மு.க. செயற்குழு கூட்டத்தில், கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்டங்களை மறுசீரமைப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி தற்போது உள்ள 77 மாவட்டங்களை 110 மாவட்டங்களாக பிரித்து புதிய நிர்வாக கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
இந்தப் பணிக்காக ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் இரண்டு பிரதிநிதிகள் என மொத்தம் 76 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட செயலர்கள் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி, புதிய நிர்வாக அமைப்புக்கான பரிந்துரைகளை தயாரிக்க உள்ளனர்.
இதையும் படிங்க: பேருந்தில் இருந்து தள்ளப்பட்ட மாணவிகள்..! வெட்கி தலை குனியனும்..!! கனிமொழி MP கண்டனம்.!
குறிப்பாக, அடுத்த 15 நாட்களுக்குள் தொகுதிவாரியாக நகரம், ஒன்றியம், பேரூர், வட்டம் மற்றும் கிளை அமைப்புகளை எவ்வாறு பிரிப்பது என்பது குறித்து பரிந்துரைகள் அளிக்க வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்சியின் அடிப்படை அமைப்புகளை புதிதாக மாற்றியமைக்கும் பணிகள் வேகமெடுக்க உள்ளன.
இந்தப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக, ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு 76 பிரதிநிதிகளும் பங்கேற்கும் வீடியோ கான்பரன்ஸ் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட மறுசீரமைப்பு பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளில் எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி மகளிரணி மற்றும் இளைஞரணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் மாநில நிர்வாகிகளும் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 6 எம்.பி.க்கள், 5 முன்னாள் எம்.பி.க்கள், 9 எம்.எல்.ஏ.க்கள், 11 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மகளிரணியைச் சேர்ந்த 6 பேர் மற்றும் இளைஞரணியைச் சேர்ந்த 5 பேர் இதில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் முக்கிய நிர்வாகிகள் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் எதிர்கால அமைப்பு வலுப்பெற வேண்டும் என்ற நோக்கில், பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கி இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன் மூலம் தி.மு.க.வில் மாவட்ட அளவிலான நிர்வாக கட்டமைப்பை மாற்றியமைக்கும் பணிகள் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன.
இதையும் படிங்க: மேட்டூர் அணை தாமத திறப்பால் பல பிரச்சனைகள்..!! MRK பன்னீர் செல்வம் விளாசல்.!!