×
 

“தவெக அமைச்சரவையில் அனைவருமே ஜோக்கர்கள்...” - பாரபட்சம் பார்க்காமல் விஜய் ஆட்சியை விளாசித் தள்ளிய திமுக முன்னாள் அமைச்சர்...!

ஆதவ் அர்ஜூனா தான் நிழல் முதலமைச்சராக இருந்து, இந்த அரசை இயக்கிக் கொண்டிருக்கிறார் என திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு.

தவெக அமைச்சரவையில் உள்ள அனைவருமே ஜோக்கர்கள்: இந்த அரசின் முதலமைச்சர், விஜய் அல்ல.

அரியலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர்...

இந்த தேர்தல் தோல்வி, மிக குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட தோல்வி திமுகவினரின் ஆழ்மனதில் மாறா வடுவாக பதிந்துள்ளது. திமுக தொண்டர்களை தாண்டி பொதுமக்களிடத்திலும், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படிப்பட்ட ஒருவரை முதலமைச்சராக தவற விட்டு விட்டோம் என்ற எண்ணம் பொதுமக்களின், ஒருசாரார் இடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: மக்களே உஷார்...!! - இன்று திருச்சி செல்கிறார் முதலமைச்சர் விஜய்... விடிந்ததுமே செய்யப்பட்ட அதிரடி மாற்றம்...!

இந்த ஆட்சி மாற்றம் ஏதோ பெரிய மாற்றம் அல்ல 35% பேர் இந்த மாற்றத்திற்கு காரணமாக இருந்துள்ளனர். அதிலும் 20% பேர் அவரது ரசிகர்கள். ஆட்சி மாற்றம் வேண்டும் என புதிய கட்சி உருவெடுக்கும் போதெல்லாம் வாக்களிக்கும் ஒரு சாரார். கடைசி நேர மாற்றமாக குழந்தைகளை மனதில் வைத்து அவர்களை திசை திருப்பி எந்த அளவில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை பேசி கொண்டு வந்தது தான், ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது. 

குழந்தைகளுக்கு இனிப்பு மிட்டாய் தருவது போல, இணையத்தில் தொடர்ந்து இனிப்பானவை பேசி வந்த இன்புளுயன்சர்களை தவெக விலைக்கு வாங்கி, திமுக ஆட்சிக்கு எதிரான செய்திகளாக பரப்பி ஆட்சியைப் பிடித்துள்ளனர். 

இந்த ஆட்சி மாற்றம் என்பது நீடித்து நிலைக்காது. இது நீர்க்குமிழி போல, விரைவிலேயே வெடித்து நீர்த்துப்போகும். தற்போது பெற்ற வாக்குகளை மீண்டும் வாங்க முடியாது என்ற காரணத்தினால்தான், அதிமுகவில் இருப்பவர்களை வலை வீசி பிடித்துக் கொண்டுள்ளனர். 

ஆளும் கட்சியாகி, ஆட்சி அமைத்த பின்னும் அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி அவர்களை ராஜினாமா செய்ய வைத்து மீண்டும் தேர்தலில் போட்டியிட செய்ய திட்டமிட்டுள்ளனர். மறுபுறம் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்களை, மாவட்ட செயலாளர்களை பிடித்துக் கொண்டு போய் தவெகவில் சேர்க்க காரணம், அவர்களிடம் அமைப்பு இல்லை. 

அந்த அமைப்பை எப்படியாவது உருவாக்கிவிடதான் ஆதவ் அர்ஜூனா, அதிமுக என்பது இனி தவெகதான் என மாயையை விதைத்துப் பேசி, தவெகவை வலுப்படுத்த முயல்கிறார். ஏனெனில் இதே வாக்கு சதவீதம் தொடராது என அவர்களுக்கு தெரியும். 

தவெக எந்த ஆயுதத்தை கையில் எடுத்து மக்கள் மனதை ஏமாற்றினார்களோ, இன்று அதே ஆயுதம் அவர்களுக்கு எதிராகவே திரும்பி உள்ளது. சமூக வலைதளங்களில் புதிதாக பேசும் இளைஞர்கள் இளம்பெண்களை அதிகம் பார்க்க முடிகிறது அவர்கள் யாவரும் திமுகவோ, திமுகவுக்கு தொடர்புடையவர்களோ கிடையாது. 

தவெகவுக்கு இணையம் மூலம் எந்த அளவுக்கு கிராஃப் மேலே ஏறியதோ, தற்பொழுது அதே அளவு கீழ இறங்கி கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலைதான், தவெக சந்தித்து வருகிறது. 

தவெகவில் இன்று யார் முதலமைச்சர்? என்றால், அது விஜய் அல்ல. ஆதவ் அர்ஜுனா தான். பின்னாலிருந்து நிழல் முதலமைச்சராக அவர் தான் செயல்படுகிறார் என்பது பட்டவர்தனமாக தெரிகிறது. அவர்கள் அறிவிக்கின்ற திட்டங்கள் எல்லாம், ஏற்கனவே திமுக அறிவித்த திட்டங்களுக்கு பெயரை மாற்றி அறிவிக்கின்றனர். 

விவசாய கடன் என்று சொல்லி விவசாயிகளை ஏமாற்றியதை இன்று எல்லோரும் பேசுகிற, விவாதிக்கின்ற அளவிற்கு இந்த செய்தி கீழே சென்று கொண்டிருக்கிறது. அதை முழுமையாக கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கானது.

இந்த தோல்வி திமுக இன்னும் வேகமாக மீண்டு வருவதற்கான, வாய்ப்பாக தான் நாம் பார்க்க வேண்டும். நாம் பார்க்காத தோல்வி அல்ல. 10 ஆண்டுகாலம் எதிர்க்கட்சியாக தொடர்ந்து இருந்தோம். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களது உழைப்பால் தான், மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றோம். 

ஆனால், ஒரு மாயையை ஏற்படுத்தி ஊடக மாயாஜாலத்தின் மூலமாக, ஒரு குறை பிரசவ வெற்றியை பெற்றுள்ளனர். அது முழு வெற்றி அல்ல. இது நீண்ட நாள் உயிர் தாங்காது. இதை இன்னும் எவ்வளவு மோசமான நிலைக்கு பார்க்க வேண்டுமோ அதை எல்லாம் நாம் பார்க்க வேண்டி உள்ளது. 

"பதிமூன்று சீட்டும் ஜோக்கர் ஆகவே உள்ளது போல, தற்போதைய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் எல்லாருமே ஜோக்கராக உள்ளனர்". இதில் மூத்த அமைச்சர் என்றால் அது செங்கோட்டையன் மட்டும்தான். திமுக உறுப்பினர்கள் கேள்வி கேட்டால் எழுந்து உடனேயே பதில் சொல்லி அமர்ந்து விடுவார். நீண்ட நேரம் அவரால் பதில் சொல்ல முடியாது.

அமைச்சர்களுக்கு இரண்டு மாதம் பேசுவதற்காக பயிற்சி தந்து அதன் பிறகு அமைச்சரவையில் வாய்ப்பு அளித்திருக்கலாம் விஜய். அப்படிப்பட்ட ஒரு நிலையை மக்கள் மனதில் அவர்களை மோசமான நிலையை உண்டாக்கியுள்ளனர் அதை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டிய பணியைத்தான் நாம் செய்ய வேண்டும். 

இந்த தேர்தல் என்பது நமக்கும் ஒரு பாடமாக அமைந்து விட்டது நாம் நல்லவற்றை செய்தோம். எல்லா மக்களுக்கும் திட்டங்களை கொண்டு சேர்த்த என்பது மட்டுமே வெற்றிக்கு உதவாது என்பதை விட, இன்னும் இதுபோன்று குறுக்கு வழிகளில் வருபவரை தடுக்க வேண்டிய பணியையும் நாம் சேர்த்து செய்ய வேண்டும் என்பதை தான் காலம் நமக்கு பாடமாக தந்துள்ளது. இதையெல்லாம் தாண்டி வருவோம் என முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசினார்.

இதையும் படிங்க: இந்த வாரம் 3 விக்கெட் விழ போகுதே! தவெகவுக்கு தாவும் நிர்வாகிகள்! எம்.எல்.ஏ-க்களை தக்க வைக்க எடப்பாடி தீவிரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share